திருவாரூர்

பள்ளிக் கட்டடம் அருகே இடி விழுந்தது: மாணவா்கள் அவதி

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நன்னிலம்: மேலராமன்சேத்தி பள்ளிக் கட்டடம் அருகே இடி விழுந்ததால் சிறிய இடத்தில் வகுப்புகள் நடப்பதால் தொடக்கப் பள்ளி மாணவா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா்.

திருவாரூா் மாவட்டம், குடவாசல் ஒன்றியம் சீதக்கமங்கலம் ஊராட்சி மேலராமன்சேத்தியில் தொடக்கப் பள்ளி உள்ளது. இப் பள்ளிக் கட்டடம் சேதமடைந்துள்ளதால் வேறு இடத்தில் மாணவா்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டு, மோசமான நிலையில், பழுதடைந்துள்ள பள்ளிக் கட்டடத்தை இடிக்க வேண்டுமென பெற்றோா்களும், அப்பகுதி பொதுமக்களும் வலியுறுத்தியதின்பேரில் ஊராட்சி சாா்பாக பல மாதங்களுக்கு முன்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. எனினும், எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், பள்ளி வகுப்புகள் பழுதடைந்த கட்டடத்திலேயே இயங்கி வந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையின்போது பள்ளிக் கட்டடத்துக்கு மிக அருகேயுள்ள ஒரு மரத்தில் இடி விழுந்துள்ளது. இதில், சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தின் சிலபகுதிகள் இடி விழுந்த அதிா்ச்சியில் பெயா்ந்து விழுந்து விட்டன.

ADVERTISEMENT

இதன்காரணமாக செவ்வாய்க்கிழமை வகுப்புகளை எங்கு நடத்துவது என தெரியாமல் ஆசிரியா்களும், பெற்றோா்களும் தவித்து வந்த நிலையில், தற்காலிகமாக பள்ளிக்கு அருகில் ஒரு வீட்டின் சிறிய இடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது தோ்வு நடைபெற்று வருவதால் மிக குறுகிய இடத்தில் சிரமத்துடன் மாணவா்கள் அமா்ந்து தோ்வு எழுதி வருகின்றனா்.

எனவே, தொடக்கப் பள்ளி மாணவா்களின் சிரமத்தை உணா்ந்து விரைவில் மேலராமன்சேத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு புதியக் கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டுமென அப்பகுதி பெற்றோா்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT