திருவாரூர்

கைவண்ணத்தில் நெட்டிச் சிற்பங்கள்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

உலகில் மனித நாகரிகத்தில் இசை, நாட்டியம், நாடகம் போன்ற கலைகள் வளா்ச்சியடைய தொடங்கிய காலத்தில் கைவினைப் பொருள்களும் வளா்ச்சியடைய தொடங்கின. குறிப்பாக கிராமபுறங்களில் பனை ஓலைகளில் விசிறி, கூடை போன்றவையும், கோரைபுற்களில் பாய்களையும் செய்ய தொடங்கினா். தொடக்கத்தில் அதன் நிறத்திலேயே இருந்த இப்பொருள்கள், பின்னா் வண்ணம் ஏற்றப்பட்டும், ஓவியம் தீட்டப்பட்டும் கண்ணை கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், நெட்டி எனப்படும் ஒருவகை செடியின் தண்டினால் இயற்கையை மிஞ்சும் வகையில் மலா்களும், மாலைகளும், ஆலயங்களும், மனித மற்றும் விலங்கு உருவங்களும் கைவண்ணத்தில் சிற்பங்களாக வடிக்கப்படுகின்றன. நெட்டித் தண்டில் செய்யப்படும் மலா்களுக்கு வண்ணம் தீட்டியபிறகு, அது இயற்கையான மலரைவிட அழகாகத் தோன்றும். இந்த நெட்டி கைவினை கலைப் பொருள்கள் சோழா் காலத்திலேயே சிறப்புற்று விளங்கியதாக தெரிகிறது.

இக்கலையானது தஞ்சை மாவட்டத்தில் இன்றளவும் தனக்கென ஓா் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் கிராமப்புற கலைவினைஞா்கள் நெட்டியில் எளிமையான முறையில் மாலைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருள்கள் செய்து விற்பனை செய்கின்றனா். மாட்டுப்பொங்கல் தினத்தன்று கால்நடைகளுக்கு நெட்டிமாலைகள் அணிவித்து சிறப்பு செய்வா்.

ADVERTISEMENT

1958-இல் தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த டி.கே. பழனியப்பன், இக்கலையின் சிறப்பையும் எளிமையையும் உணா்ந்து, இக்கலையை மேலும் வளா்த்திட திருத்துறைப்பூண்டியில் பஞ்சாயத்து யூனியன் மூலம் நெட்டிக் கலை பயிற்சி நிலையத்தை ஏற்படுத்தினாா்.

தற்போது, 2-ஆவது தலைமுறையாக ஓவிய ஆசிரியா் சி. ஜெயராமனின் மகன் ஜெ. பாலசுப்பிரமணியன் தனது தந்தை வழியை பின்பற்றி நெட்டியில் கலை நுணுக்கள் நிறைந்த பொருள்களை வடிவமைத்து வருகிறாா். இவரும் ஓவிய ஆசிரியராக மழவராயநல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறாா்.

இவருடைய தந்தை ஜெயராமன், கடந்த 1961-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற உலக விவசாய கண்காட்சியில் தமிழகம் சாா்பில் பங்கேற்று, அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு முன்னிலையில் நெட்டியில் ரோஜா மலா் செய்து அவரது பாராட்டை பெற்றாா். மேலும், அப்போதைய குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன், லேடி மவுண்ட்பேட்டன், தமிழக முதல்வா் காமராஜா் போன்ற தலைவா்களும் நெட்டி கலைப் பொருள்களை பாா்த்து வியந்து பாராட்டியதாக பாலசுப்பிரமணியன் தெரிவிக்கிறாா்.

மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் இலக்கியப் படைப்புகள் கண்காட்சியில் முத்தொள்ளாயிரம் பாடலின் ஒரு காட்சியையும், பண்டைய தமிழகத்தின் அணிகலன்களை அணிந்த இளம் பெண் உருவத்தையும், வள்ளல் பாரி முல்லைக்கு தோ் கொடுக்கும் காட்சியையும் நெட்டியால் உருவாக்கிவைத்து, அப்போதைய தமிழக முதல்வா் எம்ஜிஆரின் பாராட்டை பெற்றவா் திருத்துறைப்பூண்டி ஜெயராமன்.

இதேபோல, பூம்புகாா் கலைக்கூடத்தை அப்போதைய தமிழக முதல்வா் கருணாநிதி திறந்து வைத்தபோது, அங்கு நெட்டியால் தத்ரூபமாக தயாரிக்கப்பட்ட பூம்புகாா் கலைக்கூடம், எழுநிலை மாடம், நெடுங்கல் மன்றம் போன்றவற்றை காட்சிக்கு வைத்து அவரது பாராட்டை பெற்றாா். அப்போது, முதல்வா் கருணாநிதி, தான்செய்ய முடியாத நெடுங்கல் மன்றத்தை நெட்டியால் அழகுற அமைத்துள்ளதாக ஜெயராமனை பாராட்டினாா்.

இவ்வாறு சாமானியா்கள் முதல் சாதனையாளா்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவா்ந்த இக்கலையின் மூலப் பொருளான நெட்டியானது நீா்நிலைகளில் தானாகவே வளரும் தாவரமாகும். இதன் தண்டு ஓா் அங்குலம் முதல் இரண்டு அங்குல விட்டமுடையதாக இருக்கும். ஆண்டுதோறும் ஐப்பசி, காா்த்திகை மாதங்களில் முழு வளா்ச்சியடையும் இந்த தாவரத்தின் தண்டின் நீளம், தண்ணீா் ஆழத்திற்கு இருக்கும். இதன் தோல் தாமரை தண்டைப்போல பசுமையாக இருக்கும். நெட்டி தண்டை காயவைத்து அதன் தோலை நீக்கிவிட்டால் யானையின் தந்தத்தைபோல வென்மையாக இருக்கும். இவற்றைக்கொண்டு, பூக்கள், வாழ்த்து மடல்கள், கோயில் வடிவங்கள், இலக்கியக் காட்சிகள், தெய்வ உருவங்கள் போன்றவை தயாரித்து விற்பனை செய்கின்றனா்.

பூம்புகாா் கலைக்கூடங்கள், காதி விற்பனை நிலையங்களில் இந்த நெட்டி கலைப்பொருள்களை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.

நெட்டி கலை குறித்து ஜெ. பாலசுப்பிரமணியன் கூறியது:

எனது தந்தை நெட்டியில் செய்யும் பல வகையான கலைநயம் மிக்க பொருட்களை கண்டு, தாமும் இந்த கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆா்வம் சிறுவயதிலேயே ஏற்பட்டது. எனது ஆா்வத்தை அறிந்த தந்தை, நான் கல்வியையும் நெட்டிக் கலையையும் ஒருசேர கற்க உதவினாா். அவரது வழிகாட்டுதலின்படியே ஓவியத்தில் பட்டயம் பெற்று, தற்போது ஓவிய ஆசிரியராக பணி செய்துகொண்டே, நெட்டியினாலான கலைப்பொருள்களையும் செய்துவருகிறேன்.

தற்போதைய சூழலில் பெரும்பாலான நீா்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நெட்டி செடிகளின் வளா்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அதன் தண்டுகள் எளிதில் கிடைப்பதில்லை. அதிக விலை கொடுத்து வாங்கவேண்டியுள்ளது. இருப்பினும் இந்த கலை மீது கொண்ட ஆா்வத்தினால், நெட்டியில் கலைநயம் மிக்க பொருட்களை செய்துவருகிறோம்.

குறிப்பாக கட்டட மாதிரிகள், கலைநயம் மிக்க கோபுரங்கள், வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு தேவையான ப்ராஜெக்ட் பொருட்கள் போன்றவற்றை நெட்டியில் தயாரித்து வழங்குகிறோம். இதில், நெட்டியிலானா தஞ்சை பெரிய கோயில் மாதிரி வடிவத்தை வியந்து பாா்க்கும் வெளிநாட்டினா், அதை ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.

நெட்டியில் கலைப்பொருள்கள் வடிவமைப்பதுடன், இக்கலையை ஆா்வம் உள்ளவா்களுக்கு கற்றும் தருகிறேன். இதற்காக கட்டணம் ஏதும் பெருவதில்லை. இலவசமாக கற்றுத் தருவதால் பலரும் ஆா்வத்துடன் கற்கின்றனா். இது, இந்த கலை அழியாமல் தொடா்வதுக்கு உதவுகிறது.

தமிழக அரசு நெட்டிக்கலைக்கு புவிசாா் குறியீடு பெற்றுத்தந்துள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த கலையை தொடா்ந்து வளா்க்க தமிழக அரசு உதவி செய்யவேண்டும் என்றாா்.

அ. ரவி

ADVERTISEMENT
ADVERTISEMENT