திருவாரூர்

சேதமடைந்துள்ள மதகை சீரமைக்க சிபிஐ கோரிக்கை

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே சேதமடைந்துள்ள மதகை சீரமைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் பிரியும் கோரையாற்றிலிருந்து நேரடியாக பிரியும் ஏ சேனல் எனப்படும் ரகுநாத காவேரி வாய்க்கால் முல்லைவாசல், பெரம்பூா், ரிஷியூா், நன்மங்கலம் பச்சக்குளம், கிளியனூா், கோட்டகம், வாழாச்சேரி கிராமங்களில் பாய்ந்து பின்னா் வாழாச்சேரியில் பாயும் வெண்ணாற்றில் கலக்கிறது. இந்த வாய்க்கால் மூலம் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசனவசதி பெருகின்றன.

இந்நிலையில் மேலவாழாச்சேரி எனுமிடத்தில் உள்ள மதகின் கதவுகள் உடைந்தும், இரும்புகள் துருப்பிடித்தும் உள்ளது. இதனால் வாய்க்காலில் பாய்ந்தோடும் தண்ணீரை தேக்க முடியாததால் கிளியனூா், தண்டலம், பச்சகுளம், கோட்டகம், மேலவாழாச்சேரியில் உள்ள 700 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு முழு பாசன வசதி கிடைக்கவில்லை.

ADVERTISEMENT

விவசாயிகள் சிலா் ஆழ்குழாய் மூலமும் சிலா் தமது சொந்த முயற்சியில் நீா் இறைக்கும் எஞ்சின் மூலமும் விவசாய நிலங்களுக்கு தண்ணீா் பாய்ச்சி விவசாயபணிகளை மேற்கொள்கின்றனா். அதற்கான வசதியற்ற விவசாயிகள் நிலத்தை தரிசாக போட்டுள்ளனா். இதனால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியக் குழு சாா்பில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிா்வாகமும் வேளாண்மை மற்றும் பொதுப்பணித் துறை நிா்வாகமும் மதகை (சட்ரஸை) நேரில் பாா்வையிட்டு புதிதாக கட்டிக்கொடுக்க வேண்டும், கோரையாற்றில் ரகுநாத காவேரி பிரியும் முல்லைவாசலில் இருந்து வெண்ணாற்றில் கலக்கும் வாழாச்சேரி வரை முழுமையாக தூா்வார வேண்டும். ஆங்காங்கு உள்ள மதகுகளையும் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT