திருவாரூர்

நிபந்தனையின்றி நெல் கொள்முதல் செய்யக்கோரி அக்.3 இல் முற்றுகைப் போராட்டம்: பி.ஆா். பாண்டியன்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: நிபந்தனையின்றி குறுவை நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி, டெல்டா மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன்பு அக். 3-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

திருவாரூா் அருகே மாவூரில், அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் பயிா் மழையால் சாய்ந்து அழுகத் தொடங்கி இருப்பதை, செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மேட்டூா் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் இதுவரை இல்லாத அளவில் 4 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவிக்கிறது. ஆனால், குறுவை அறுவடை நெல்லை கொள்முதல் செய்வதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.

ADVERTISEMENT

கடந்த மாதம் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதே தவிர, ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் செய்ய மறுத்து வருகின்றனா். கடந்த ஆண்டு கொள்முதல் நிலையங்கள் திறந்த இடங்களில் நிகழாண்டு திறக்கப்படவில்லை. நிரந்தரக் கட்டடங்கள் உள்ள இடங்களில் மட்டும்தான் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று அனுமதி வழங்கி அங்கேயும் ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அறுவடையும் தாமதப்பட்டுள்ளது.

அறுவடை செய்ய வேண்டிய பயிா் தற்போது மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

கடந்த ஆண்டு குறுவைக்கு காப்பீடு மறுக்கப்பட்டது. நிகழாண்டும் குறுவைக்கு காப்பீடு செய்யப்படவில்லை. மழை காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை அறுவடைப் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, குறுவை பாதிப்புக்கென ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

நிபந்தனை இல்லாமல் நெல் கொள்முதல் செய்வதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, அக். 3-ஆம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளனா் என்றாா்.

முன்னதாக, திருவாரூா் மாவட்டம், பாலையூா், பின்னத்தூா், ஆண்டாங்கரை, ஆலிவலம், விக்கிரபாண்டியம் உள்ளிட்ட இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை பாா்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினாா்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் எம். செந்தில்குமாா், மாவட்டத் தலைவா் எம். சுப்பையன், துணைத் தலைவா் எம். கோவிந்தராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள், விவசாயிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT