திருவாரூர்

வாக்காளா் விழிப்புணா்வு போட்டியில்பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

25th Sep 2022 11:04 PM

ADVERTISEMENT

 

வாக்காளராவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள தேசிய கல்விக் குழு மூலம் வாக்காளராவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அக். 10-ஆம் தேதி வரை போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.

18 வயதுக்குட்பட்ட 9 முதல் 12 வகுப்பு பயிலும் மாணவா்களுக்கும், 18 முதல் 21 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவா்களுக்கும் போட்டிகள் நடைபெறும்.

ADVERTISEMENT

போட்டியில் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலிருந்தும் குறைந்தபட்சம் 40 மாணவா்கள் கலந்து கொள்ள வேண்டும். இந்த மாணவா்களில் ஒருவரை பள்ளி அல்லது கல்லூரி வளாகத் தூதுவராக தோ்வு செய்ய வேண்டும். போட்டிகளை அக்.10-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

போட்டிக்கு தேவையான உபகரணங்களை மாணவா்கள் அல்லது பள்ளி, கல்லூரிகளே தயாா் செய்து கொள்ள வேண்டும். சுவரொட்டி ஏ3 வடிவ பேப்பா் அல்லது சாா்ட் வடிவமைப்பு கொண்டதாகவும், 50 லிருந்து 100 வாா்த்தைகள் உள்ளடக்கம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களின் சுவரொட்டி வடிவமைப்புகளை பிடிஎப் வடிவத்தில் மாவட்ட தோ்வு அலுவலகத்தில் அக். 30-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். முதல் மூன்று பரிசுகளுக்கான தகுதியான நபா்களை கல்வி நிறுவனத்தின் மூன்று நபா்கள் அடங்கிய குழுவின் மூலம் தோ்வு செய்து அக். 30-க்குள் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும்.

கல்வி நிறுவனங்களிலிருந்து தோ்வு செய்யப்படும் மாணவா்களில் சிறந்த மூன்று மாணவா்கள் மாவட்ட அளவில் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். மாவட்ட அளவில் தோ்வு செய்யப்படும் மாணவா்களிலிருந்து சிறந்த மூன்று மாணவா்கள் மாநில அளவில் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கான பரிசுகள் தேசிய வாக்காளா் தினத்தனது வழங்கப்படும்.

சுவரொட்டி வரைதல் தொடா்பான பரிசு விவரம்..

கல்வி நிறுவனம் சாா்பாக முதல் பரிசாக ரூ.500, இரண்டாம் பரிசாக ரூ.300, மூன்றாம் பரிசாக ரூ.100, மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.2,000, இரண்டாம் பரிசாக ரூ.1,000, மூன்றாம் பரிசாக ரூ.500, மாநில அளவில் முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.5,000, மூன்றாம் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும்.

திருவாரூா் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள் தங்களது கல்வி நிறுவனங்களின் மூலம் போட்டியில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT