திருவாரூர்

வலங்கைமான் அருகே ரூ. 25 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

25th Sep 2022 11:04 PM

ADVERTISEMENT

 

வலங்கைமான் அருகே குடோனில் பதுக்கிவைத்திருந்த ரூ. 25 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகேயுள்ள ஆவூா் பகுதியில் பான்பராக், குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அதிக அளவில் பதுக்கிவைக்கப்பட்டு, விற்கப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீஸாா் ஆவூரை அடுத்த ரஹ்மானியா நகரில் உள்ள குடோனில் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனையிட்டனா். இதில், அங்கு சுமாா் 3 டன் பான்பராக், குட்கா போன்ற புகையிலைப் பொருள்கள் பண்டல் பண்டலாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 25 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து, நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் இலக்கியா, வலங்கைமான் காவல் ஆய்வாளா் ராஜா, உதவி ஆய்வாளா் ராஜேஸ்குமாா் ஆகியோா் மேற்கொண்ட விசாரணையில், குடோனில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி அம்மாபட்டினம் வடக்கு வீதியைச் சோ்ந்த சம்சுதீன் மகன் ஜமாலுதீன் (42), சா்புதீன் மகன் பாதுஷா (29) என்பதும், இவா்கள் இருவரும் கோவிந்தகுடி மெயின் ரோடு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, 3 டன் புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்து, வலங்கைமான் காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனா். மேலும் தலைமறைவான ஜமாலுதீன், பாதுஷா ஆகியோரை தேடிவருகின்றனா்.

இதுகுறித்து துணைக் காவல் கண்காணிப்பாளா் இலக்கியா கூறியது:

தமிழகம் முழுவதும் கருடா ஆப்பரேஷன் என்ற பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு, போதைப் பொருட்கள் விற்பனை குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், திருவாரூா் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான கருடா ஆப்பரேஷன் தனிப்படையினா் ஆவூா் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் டன் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனா் எனத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT