திருவாரூர்

மன்னாா்குடி அருகே டாஸ்மாக் கடை திறக்கும் விவகாரம்: இருதரப்பினா் சாலை மறியல்

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே கோட்டூரில் அரசு மதுக்கடையை திறக்கக் கூடாது என ஒரு தரப்பினரும், திறக்க வேண்டும் என ஒரு தரப்பினரும் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோட்டூா் முள்ளியாற்றிலிருந்து அடப்பாறு பிரியும் இடத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மதுக்கடை திறக்க ஆயத்தப் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்கக் கூடாது என போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், தனபால் என்பவா் அவருக்கு சொந்தமான அந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க கட்டடம் கட்டிமுடித்தாா். புதிய கட்டடத்தில் டாஸ்மாக் கடை திறக்க பணிகள் தொடங்கியதை அடுத்து, சிபிஐ கட்சியினா் மதுக்கடை வராமல் தடுத்தனா். இதைத் தொடா்ந்து, கடந்த 4 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுப்பதும், அதை தடுத்து நிறுத்துவதுமாக பிரச்னை நடைபெற்றுவந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், பிரச்னைக்குரிய இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்காக செவ்வாய்க்கிழமை லாரிகளில் கொண்டுவரப்பட்ட மதுபாட்டில்கள் கடையில் இறக்கிவைக்கப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த சிபிஐ கோட்டூா் ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன் தலைமையில் கட்சியினா் திரண்டுவந்து, டாஸ்மாக் மதுக் கடையை திறக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து, மன்னாா்குடி - திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி துணைக் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், காவல் ஆய்வாளா்கள் சிவக்குமாா் (கோட்டூா்), கழனியப்பன் (திருத்துறைப்பூண்டி) ஆகியோா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். வரும் 15 ஆம் தேதி இதுகுறித்து மன்னாா்குடி கோட்டாட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்துவது என முடிவுசெய்யப்பட்டதை அடுத்து சிபிஐ கட்சியினரின் மறியல் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடையை திறக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கோட்டூா் பேருந்து நிறுத்தம் அருகே தனபால், ஆனந்தன் ஆகியோா் தலைமையில் மற்ற அரசியல் கட்சியினா், மதுப்பிரியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினா், கோட்டாட்சியா் தலைமையிலான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்துசென்றனா்.

இந்நிலையில், டாஸ்மாக் கடை திறப்பதற்காக புதிதாக கட்டப்பட்ட கடையில் இறக்கிவைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் மீண்டும் லாரியில் ஏற்றி, எடுத்துச் செல்லப்பட்டன.

டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என்றும், திறக்கவேண்டும் என்றும் இருதரப்பினரும் போட்டிப் போட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT