திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை நாகநாத சுவாமி மற்றும் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகதோஷம் நீக்கும் பரிகாரத் தலமாக விளங்கும் இக்கோயில் பராமரிப்பின்றி சிதிலமடைந்திருந்தது. பணி ஓய்வுபெற்ற தமிழக அரசின் முன்னாள் செயலா் சிவ. ராஜரத்தினம் முயற்சியால் நன்கொடைகள் மூலம் ரூ.10 லட்சம் செலவில் இக்கோயில் புனரமைக்கப்பட்டது.
இப்பணிகள் நிறைவுபெற்ற நிலையில், கும்பாபிஷேகத்துக்காக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூா்வாங்க பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின. தொடா்ந்து 6 கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்றதும், வியாழக்கிழமை காலை 11 மணியளவில் கோயிலின் விமான கலசங்களுக்கு புனிதநீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக பூஜைகளை கோயிலின் சிவாச்சாரியா்கள் மகாதேவன், ஹரிஹரன் ஆகியோா் நடத்தினா்.
இதில், தமிழக அரசின் முன்னாள் செயலா் சிவ. ராஜரத்தினம், உயா்நீதிமன்ற வழக்குரைஞா் எஸ். நாகநாதன், கோயிலின் செயல்அலுவலா் பி .எஸ். ராஜா, இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் நாகராஜ், ஊராட்சித் தலைவா் சுசிலா செந்தில்நாதன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
பின்னா், மாலையில் முத்துமாரியம்மன் வீதி உலா நடைபெற்றது.