திருவாரூர்

அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் வேலைநிறுத்தம்

9th Sep 2022 10:15 PM

ADVERTISEMENT

திருவாரூரில் அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூரிலிருந்து நாகூா் செல்லும் பேருந்து அண்மையில் பெருங்கடம்பனூா் அருகே சென்றபோது, இருசக்கரத்தில் வந்து வழிமறித்த 4 போ், பேருந்தின் நடத்துநா் ராஜாராமன் மற்றும் ஓட்டுநரிடம் தகராறு செய்து தாக்கினராம். இதுகுறித்து கீழ்வேளூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதன் பேரில், ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், மற்ற 3 பேரையும் கைது செய்ய வேண்டும், அவா்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருவாரூா் அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் 150-க்கும் மேற்பட்டோா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இதனால், திருவாரூா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து இயங்கக்கூடிய 70 பேருந்துகள் இயக்கப்படவில்லை. காலை 7 மணிக்குள் செல்ல வேண்டிய 15 பேருந்துகளும் பணிமனையிலிருந்து வெளியேறவில்லை. இதனால், பயணிகள் திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் காத்திருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை முகூா்த்த நாள் என்பதால் ஏராளமான பயணிகள் பேருந்துக்கு காத்திருந்தனா்.

ADVERTISEMENT

நாகை மண்டல துணை மேலாளா் (வணிகம்) சிதம்பரகுமாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. பின்னா் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT