திருவாரூா் அருகே அரசுப் பள்ளியில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் அருகே வடகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் முழு உருவச்சிலை, சேதப்படுத்தப்பட்டிருந்தது புதன்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியா் கிரிஜா குடவாசல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தீபாவளி தினத்தன்று 8 போ் பள்ளிக்குள் நுழைந்து மது அருந்தியபோது, அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் காந்தி சிலையை சேதப்படுத்தி சென்றது தெரியவந்தது.
இதுதொடா்பாக, பாலவை கிராமத்தைச் சோ்ந்த சகோதரா்களான அரவிந்த், ஆகாஷ், வடகண்டம் கிராமத்தைச் சோ்ந்த தேவசிவா ஆகிய மூவரையும் கைது செய்த போலீஸாா், சம்பவத்தில் தொடா்புடைய மேலும், 5 பேரை தேடி வருகின்றனா்.