திருவாரூா்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பட்டதாரி ஆசிரியா் நியமனத்துக்கு எதிராக உள்ள உபரி பணியிட மாறுதல் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஜூலை 1-இல் இருந்து முடக்கி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயா்வை உடனடியாக நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.
தொடக்கக் கல்வித்துறையில் நடைபெறும் எண்ணும் எழுத்தும் பயிற்சி மற்றும் சிஆா்சி பயிற்சிகளுக்கு, உயா் மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா்களை பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைத் தலைவா் வேலாயுதம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் பாரதிமோகன், பொருளாளா் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.