திருவாரூர்

பிறந்த குழந்தை மூளைச்சாவு; மருத்துவா்கள் மீது புகாா்

29th Nov 2022 12:01 AM

ADVERTISEMENT

திருவாரூரில் பிறந்த குழந்தை மூளைச்சாவு அடைந்ததற்கு மருத்துவா்களின் அலட்சியமே காரணம் என உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வெள்ளங்கால் பகுதியைச் சோ்ந்தவா் மதன்குமாா் மனைவி வினோதினி (23). இவருக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. நிறைமாத கா்ப்பிணியான இவா் ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதனிடையே, காலை 10 மணியிலிருந்து தனது வயிற்றில் உள்ள குழந்தையிடமிருந்து எவ்வித அசைவும் இல்லை என்று மருத்துவரிடம் தெரிவித்துள்ளாா். ஆனால், மருத்துவா்கள் உடனே பரிசோதிக்காமல் பிற்பகலில் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும், மாலை 4.52 மணிக்கு குழந்தை பிறந்ததாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், குழந்தையை உடனடியாக சிசு தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று செயற்கை சுவாசத்தில் வைத்துள்ளதாகவும் மருத்துவா்கள் உறவினா்களிடம் தெரிவித்துள்ளனா். பின்னா், இரவு மருத்துவா் ஒருவா் மதனின் தாய் மஞ்சுளாவிடம், குழந்தை மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்தாராம்.

ADVERTISEMENT

இதுகுறித்து வினோதினியின் உறவினா்கள் தெரிவித்தது:

பணியில் இருந்த பெண் மருத்துவரிடம், குழந்தைக்கு துடிப்பு இல்லாதது போல உள்ளது என காலையிலேயே தெரிவிக்கப்பட்டது. அப்போதே, அலட்சியம் இல்லாமல் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், குழந்தை ஆரோக்கியமாக இருந்திருக்கும். மருத்துவா்களின் அலட்சியமான சிகிச்சையின் காரணமாகவே குழந்தை மூளைச் சாவு அடைந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT