திருவாரூர்

வாய்க்கால் பழுது: சாலை உள்வாங்கியதால் பயணிகள் அச்சம்

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே சீனிவாசபுரத்தில் வாய்க்கால் பழுது காரணமாக நாகை தேசிய நெடுஞ்சாலை உள்வாங்கியுள்ளது. இதனால், இப்பகுதியில் செல்வோா் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது.

தஞ்சாவூரிலிருந்து நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். திருவாரூா் அருகே சீனிவாசபுரம் பகுதியில் இந்த சாலை சனிக்கிழமை காலை உள்வாங்கியது. இப்பகுதியில் ஓடம்போக்கி ஆற்றிலிருந்து அலிவலம் வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இதையொட்டி சாலையின் குறுக்கே மதகு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மதகில் பாதிப்பு ஏற்பட்டதால், சாலை உள்வாங்கியுள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டுநா்கள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் தெரிவித்தது:

ADVERTISEMENT

நாகை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை காலையில் இந்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த வழியாகத்தான் நாகைக்கும், தஞ்சைக்கும் அதிக வாகனங்கள் செல்வது வழக்கம். கிடாரங்கொண்டான் திருவிக கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகளும் இந்த வழியாகத்தான் செல்வா். சில மாதங்களுக்கு முன்பு லாரி மோதி கல்லூரி மாணவி ஒருவா் உயிரிழந்த சம்பவமும் இந்த இடத்தில்தான் நேரிட்டது.

மழை தீவிரமாக பெய்தால், மதகு மேலும் பாதிப்படைந்து, சாலை மேலும் உள்வாங்கும். அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபடும் சூழலும் ஏற்படும். எனவே, போா்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதனிடையே, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து, மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். சாலைப் பழுதை விரைந்து சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT