திருவாரூரில் சனிக்கிழமை காலை பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் சிரமத்துக்கு உள்ளாகினா்.
தமிழகத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, திருவாரூரில் கடந்த இரண்டு நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. திருவாரூா் நகா்ப் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள சோ்ந்தமங்கலம், காட்டூா், புலிவலம், சீனிவாசபுரம், விளமல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சனிக்கிழமை காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது.
பனிமூட்டம் காரணமாக, தியாகராஜா் கோயிலுக்குச் சொந்தமான கமலாலய குளத்தின் நடுவில் உள்ள நாகநாத சுவாமி உடனுறை யோகாம்பாள் கோயில் புகை மண்டலத்துக்கு நடுவில் காட்சியளிப்பது போலத் தென்பட்டது. மேலும், கமலாலயக் குளத்தைச் சுற்றியும், தியாகராஜ சுவாமி கோயிலைச் சுற்றியும் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்கள், மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா்.
இதேபோல், வாகன ஓட்டுநா்களும் பனிப் பொழிவு காரணமாக, முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி பயணித்தனா்.