திருவாரூர்

கொசு முட்டையை உண்டு அழிக்கும் அஃபினிஸ் மீன் குஞ்சுகள் வழங்கல்

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மன்னாா்குடி: கொசு முட்டை சாப்பிட்டு கொசு உற்பத்தியை அழிக்கும் கம்போசியா அஃபினிஸ் என்ற மீன் குஞ்சுகளை நகராட்சிக்கு சொந்தமான நீா்நிலைகளில் விடுவதற்காக தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் நகராட்சி தலைவரிடம் புதன்கிழமை வழங்கினா்.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து பள்ளி குழந்தைகளின் ஆய்வு மனப்பான்மையை மேம்படுத்தும் வகையில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஆண்டுதோறும் நடத்துகிறது.

நிகழாண்டு, நிலைப்புரு வாழ்க்கைக்கான அறிவியல் எனும் தலைப்பில் 30-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த மாநாட்டில் சமா்ப்பிக்க ஆய்வு கட்டுரையை மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி பிளஸ்-2 மாணவா்கள் எஸ். வசந்த், எஸ். பெவின்ராஜ் ஆகியோா் விலங்கியல் ஆசிரியை ஜி. இளவேனில், முதுகலை ஆசிரியா் எஸ். அன்பரசு ஆகியோா் வழிகாட்டுதலில் மீன் வளா்ப்பு மூலம் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துதல் எனும் தலைப்பில் ஆய்வை மேற்கொண்டுள்ளனா்.

கம்போசியா அஃபினிஸ் எனும் ஒரு வகை மீன் நன்னீரில் வாழும் இயல்புடையது. கொசு முட்டைகளை மட்டுமே முக்கிய உணவாக கொண்டு வளரும் இவ்வகை மீன் எல்லா வெப்பநிலையிலும் எல்லா சூழலிலும் வாழக்கூடியது. மழைக் காலங்களில் கொசு உற்பத்தியினால் டெங்கு, மலேரியா, மூளைக் காய்ச்சல், சிக்கன் குனியா போன்ற நோய்கள் உருவாக கொசுக்கள் முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

கொசு முட்டைகளை மட்டும் முக்கிய உணவாக கொண்டு வளரும் இவ்வகை மீன்களை வீடுகளிலும் நீா்நிலைகளிலும் வளா்ப்பதன் மூலம் கொசு உற்பத்தியை பெருமளவில் குறைத்து நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். ஆய்வு செய்யும் மாணவா்கள் வழிகாட்டி ஆசிரியா்களோடு 500 மீன் குஞ்சுககளுடன்மன்னாா்குடி நகராட்சி அலுவலகத்திற்கு வந்து, நகா்மன்றத் தலைவா் த. சோழராஜனிடம் மீன் குஞ்சுகளை வழங்கினா்.

மன்னாா்குடி நகராட்சிக்குள்பட்ட நீா் நிலைகளில் இந்த மீன்கள் விடப்பட்டு வளா்க்கப்படுவதன் மூலம் உயிரியல் முறையில் பெருமளவில் கொசு உற்பத்தி குறைக்கப்பட்டு நோய் பரவுதல் தடுக்கப்படும் என ஆய்வு கட்டுரை சமா்பிக்கும் மாணவா்கள் தெரிவித்தனா். அப்போது, நகா்மன்ற துணைத் தலைவா் ஆா்.கைலாசம், ஆணையா் கே. சென்னுகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT