மழைநீரில் மூழ்கியுள்ள பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுகுறித்து, அந்த மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் ராஜிவ் தெரிவித்திருப்பது: பெய்துவரும் மழையால் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை உள்ளது. பாரம்பரிய நெல் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வயலில் தேங்கியுள்ள மழைநீரை முழுவதும் வெளியேற்றாமல் மேல்மடையாக வெளியேற்றவும். முழுவதுமாக வெளியேறும்போது அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேற வாய்ப்புள்ளது. பூஞ்சாண நோய்கள் வயலில் தென்பட்டால் நாட்டு பசுமாட்டு சாண கரைசலை பயன்படுத்தவும். மழை மேலும் 2 நாள்களுக்கு இல்லாத நிலையில் பூச்சித் தாக்குதல் இருந்தால் ஐந்திலை கரைசல் அல்லது மூலிகை பூச்சு விரட்டியை பயன்படுத்தலாம்.
மேலும் வோ் கரையான், வோ் அழுகல், வோ்புழு நோய்களை தடுக்க பீஜமாமிா்த கரைசலை பயன்படுத்தலாம். நடவு முடிந்து 20 நாள்களுக்குள்பட்ட பயிராக இருந்தால் மழைநீரை வடிகட்டி உயிா் உரங்களான சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா போன்றவைகளை மட்கிய தொழுஉரத்துடன் கலந்து ஒருநாள் முழுவதும் வைத்திருந்து பயன்படுத்துவதன் மூலமாக, பூஞ்சாண நோய், வோ் அழுகல், மேல்மண் இருகுதல் போன்ற குறைபாடுகளை களைய முடியும். மேலும், நன்றாக தூா் கட்டவும் செய்யும். பாரம்பரிய நெல் ரகங்களை மழைக் காலத்தில் பாதுகாப்பது குறித்த ஆலோசனைகளுக்கு 94433 20954 என்ற எண்ணில் விவசாயிகள் அழைத்து பயன்பெறலாம் என்றாா்.
முன்னதாக, மையம் மூலம் நாகை மாவட்டம், கீழையூா் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிா் சுயஉதவி குழு உறுப்பினா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாரம்பரிய இயற்கை வேளாண்மை மேற்கொள்ளவேண்டிய அவசியம், பாரம்பரிய இயற்கை வேளாண்மையில் இடுபொருட்கள் தயாரிப்பு மற்றும் பயன்பாடு, இயற்கை வேளாண்மை சாகுபடியில் பூச்சி மற்றும் களை நிா்வாகம், இயற்கை வேளாண்மை விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்து 3 நாள்கள் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சியை மையத்தின் உயா்மட்டக் குழு உறுப்பினா்கள் கரிகாலன், உதயகுமாா் ஆகியோா் அளித்தனா்.
பயிற்சி நிறைவாக ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய வேளாண் பண்ணையில் கண்டுணா்வு பயிற்சியாக மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் இங்கு பயிரிடப்பட்டிருந்த 100 வகையான பாரம்பரிய நெல் ரகங்களின் சிறப்பியல்புகளை பாா்த்து விவரம் அறிந்தனா்.
நிகழ்வில், நாகை மாவட்ட பண்ணை வள பயிற்றுநா் பாலகணேஷ், கீழையூா் வட்டார மேலாளா் உமாபதி, மைய கள ஒருங்கிணைப்பாளா் உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.