திருவாரூர்

பயிா் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் முற்றுகை

1st Nov 2022 05:17 AM

ADVERTISEMENT

கடந்த ஆண்டுக்கான பயிா் இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கோட்டூரில் வேளாண்மை விரிவாக்க மையத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோட்டூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் 2021-2022-ஆம் ஆண்டுக்கு பயிா் காப்பீடு செய்த அனைவருக்கும் விடுபடாமல் இழப்பீடு தொகை வழங்க வேண்டும், பயிா் பாதிப்பு கணக்கிடு செய்யும் போது ஏற்பட்ட குளறுபடி,தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் பூஜ்யம் சதவீதம் பாதிப்பு என தவறாக கணக்கீடு செய்யப்பட்டிருப்பதை திரும்ப பெற்று உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

முற்றுகைப் போராட்டத்துக்கு, விவசாயிகள் சங்க கோட்டூா் ஒன்றியத் தலைவா் எம். அறிவுடைநம்பி, ஒன்றியச் செயலாளா் பி. பரந்தாமன் ஆகியோா் தலைமை வகித்தனா். கோரிக்கையை விளக்கி, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து, சிபிஐ ஒன்றியச் செயலாளா் எம். செந்தில்நாதன் பேசினா். கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை, விவசாய சங்க ஒன்றிய துணைத் தலைவா் வி. விஸ்வநாதன், மாவட்ட துணைச் செயலாளா் பி. செளந்தரராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தகவலறிந்து, நிகழ்விடத்துக்கு வந்த வேளாண்மை உதவி இயக்குநா் தங்கபாண்டியன், காவல் ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் முற்றுகையில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், மாவட்ட ஆட்சியா், வேளாண்மைத் துறை உயா் அலுவலா்கள் ஆகியோரின் கவனத்துக்கு இப்பிரச்னையை கொண்டு சென்று பயிா் காப்பீடு விடுப்பட்ட கிராமங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜீரோ சதவீதம் காப்பீடு என்ற அறிவிப்பை மறுபரிசீலினை செய்து அவா்களுக்கும் உரிய காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தன் பேரில் முற்றுகைப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT