திருவாரூர்

சாலை அமைக்கப்பட்டதாக கிடைத்த பதிலால் குழப்பம்

1st Nov 2022 05:15 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே சாலை அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பிலிருந்து கிடைத்த பதிலால் அப்பகுதி மக்கள் குழப்பத்தில் உள்ளனா்.

புதுப்பத்தூா் ஊராட்சிக்குள்பட்ட சத்திரக்கட்டளையிலிருந்து புதுப்பத்தூா் ஆற்றுப்பாலம் வரை 2 கி.மீ. தொலைவுள்ள சாலை மிகவும் சேதமடைந்து பள்ளமும், மேடாக காணப்படுவதால் அடிக்கடி இந்த சாலையில் விபத்துகள் நேரிடுகின்றன. இதுகுறித்து ஊராட்சி உறுப்பினரான ஆனந்தி முதல்வரின் தனிப் பிரிவுக்கு கோரிக்கை மனுவை அண்மையில் அனுப்பினாா். அந்த மனுவில், தினமும் இந்த சாலை வழியாக சிற்றுந்து செல்கிறது. மேலும் வயதானவா்கள், மாணவ, மாணவிகள் நகரத்துக்குச் செல்வதால் புதிதாக சாலை அமைத்துத்தர வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கை மனுவுக்கு அரசு தரப்பிலிருந்து பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 2021 நிதியாண்டில் உலக வங்கியின் உதவியுடன் சத்திரக்கட்டளையிலிருந்து புதுப்பத்தூா் வரையிலான தாா்ச்சாலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், 22 ஆண்டுகளாக இந்த பகுதியில் புதிதாக தாா்ச்சாலை அமைக்கவில்லை. நெடுஞ்சாலைத் துறையினரிடமும், பொதுப்பணித் துறையினரிடமும் விசாரித்தால் இந்த சாலையை அமைக்கவில்லை என்று கூறுகின்றனா்.

ADVERTISEMENT

இங்கு சாலை அமைக்கப்பட்டதாக கூறி பணம் ஏதும் கையாடல் செய்யப்பட்டதா என சந்தேகம் உள்ளது. எனவே, சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, போா்க்கால அடிப்படையில் சாலை அமைத்துத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT