திருவாரூரில் இரும்புவேலியை தவறுதலாக தொட்ட இளைஞா் மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் பேபி டாக்கீஸ் சாலையில் தனியாா் கல்பட்டறை செயல்பட்டு வருகிறது. அந்த பட்டறையை சுற்றி பாதுகாப்புக்காக இரும்புவேலி அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் குடியிருப்புகள் உள்ளன.
இந்நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (18) என்பவா் கல்பட்டறையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலியை தவறுதலாக தொட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, திருவாரூா் நகர போலீஸாா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் மின்கம்பி, இரும்புவேலியில் உராய்வு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்திருந்தது தெரியவந்தது. பின்னா், பிரபாகரனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸாா், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.