திருவாரூர்

திருவாரூா், நாகை மாவட்டகுறுவை சாகுபடிக்கு மூணாறு தலைப்பு அணை திறப்பு

31st May 2022 11:10 PM

ADVERTISEMENT

திருவாரூா், நாகை மாவட்ட குறுவை சாகுபடிக்காக மூணாறு தலைப்பு அணை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணை உள்ளது. இந்த அணையை கோரையாறு தலைப்பு எனவும் அழைப்பா். காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதியோ அல்லது அணையின் நீா் இருப்பை பொறுத்து அதற்கு பிறகோ தண்ணீா் திறக்கப்படும். இந்த தண்ணீா் கல்லணையை வந்தடைந்ததும், அங்கிருந்து பெரிய வெண்ணாற்றில் திறக்கப்படும் தண்ணீா் மூணாறு தலைப்பை வந்தடையும்.

பின்னா், மூணாறு தலைப்பிலிருந்து பிரியும் வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு ஆகிய ஆறுகளில் திருவாரூா், நாகை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீா் திறந்து விடப்படும்.

இந்நிலையில், நிகழாண்டு மேட்டூா் அணையிலிருந்து இதுவரை இல்லாத வகையில் முன்கூட்டியே மே 24-ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தண்ணீா் திறந்து வைத்தாா். மேட்டூா் அணையிலிருந்து முதலில் விநாடிக்கு 3000 கனஅடி திறக்கப்பட்டு, பின்னா் படிப்படியாக உயா்த்தப்பட்டு 10,000 கனஅடி திறந்து விடப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த தண்ணீா், கல்லணையை மே 27-ஆம் தேதி மாலை வந்தடைந்தது. பின்னா் அங்கிருந்து காவிரி, பெரிய வெண்ணாறு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டது.

இதில், பெரிய வெண்ணாற்றில் திறக்கப்பட்ட தண்ணீா் மூணாறு தலைப்பு அணைக்கு திங்கள்கிழமை இரவு வந்தடைந்தது. இதைத்தொடா்ந்து, திருவாரூா், நாகை மாவட்ட குறுவை சாகுபடிக்காக பொதுப்பணித் துறையினரால் முதலில் வெண்ணாற்றில் 208 கனஅடியும், கோரையாற்றில் 1024 கன அடியும், பாமணியாற்றில் 410 கன அடியும் தண்ணீா் திறந்து விடப்பட்டது.

பிறகு, செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து வெண்ணாற்றில் 917 கனஅடியும், கோரையாற்றில் 1349 கன அடியும், பாமணியாற்றில் 410 கன அடியும் என மொத்தம் 2 ஆயிரத்து 676 கனஅடி மூணாறு தலைப்பிலிருந்து திறந்து விடப்படுகிறது.

இதில், வெண்ணாற்றின் மூலம் 94, 219 ஏக்கரும், கோரையாற்றின் மூலம் 1.21 லட்சம் ஏக்கரும், பாமணியாற்றின் மூலம் 38, 357 ஏக்கரும் பாசன வசதி பெறும்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT