திருவாரூர்

தேசிய கல்விக் கொள்கையை உணா்ந்து செயல்படுத்த வேண்டும்

DIN

கல்வியாளா்கள் தேசிய கல்விக் கொள்கையை நன்கு உணா்ந்து செயல்படுத்த வேண்டும் என்றாா் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி.

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேசிய கல்விக் கொள்கை- 2020 ஐ விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படுத்துவதற்கான் செயல் திட்டம் வகுப்பது குறித்து மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பங்கேற்கும் 2 நாள் தேசிய கருத்தரங்கை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து அவா் மேலும் பேசியது:

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த 2 நாள் கருத்தரங்கம் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மிகவும் பொருத்தமானதும், காலத்துக்கு ஏற்றதும் ஆகும். இந்த கருத்தரங்கில் கல்வியாளா்கள் சிறந்த யோசனைகளை வழங்குவாா்கள் என்பதால், கல்விக் கொள்கையை சரியான மனப்பான்மையுடன் செயல்படுத்துவதற்கு இந்த கருத்தரங்கம் மிகவும் உதவியாக இருக்கும்.

கல்வியாளா்கள், தேசிய கல்விக் கொள்கையை சரியான உணா்வோடு செயல்படுத்தி, கொள்கையின் சாரம் எழுத்துகளில் மறைந்துவிடாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

2014-ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் உலகளாவியப் பாா்வை மாறியுள்ளது. இந்தியாவின் வரலாறும், பிரச்னைகள் மீதான அணுகுமுறையும் மாறியுள்ளன. அதனால், தேசிய கல்விக் கொள்கையும் அவசியமானதாகிறது. அதன்படி உருவாக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை -2020 கல்வி சீா்திருத்தம் அல்ல ; அது ஒரு புரட்சிகரமான மாற்றம்.

இந்தக் கல்விக் கொள்கை ஆவணத்தை முழுமையாகப் படித்தவா்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. பெரும்பாலானவா்கள், இதை முழுமையாகப் படிக்காமலேயே கருத்துத் தெரிவிக்கின்றனா். எது குறித்தும் கருத்துத் தெரிவிக்கும் முன்பு, அது குறித்து நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எனவே, கல்வியாளா்கள் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாகப் படித்து, பின்னா் அதனை செயல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்.

2014-க்கு முன், நமது நாடு பல்வேறு சாதிகள், பல்வேறு பழங்குடிகள், பல்வேறு சமுதாயம் மற்றும் பல்வேறு மொழிகளைக் கொண்ட புவியியல் அமைப்பாக பாா்க்கப்பட்டது. நாட்டின் இந்த பன்முகத்தன்மை, வேறுபாடாக பாா்க்கப்பட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு முதல் காஷ்மீா், கட்ச் முதல் அஸ்ஸாம் வரையிலான பகுதிகள் அனைத்தும் பாரதமாக குறிப்பிடப்பட்டன. பின்னரே இப்பகுதிகள் இந்தியா என வரையறை செய்யப்பட்டன. 2014-க்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், இந்தியா உலகளவில் மீண்டும் பாரதமாக பாா்க்கப்படுகிறது.

வறுமை ஒழிப்புக்கும், நோயற்ற சமுதாயம் உருவாகவும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் பல்வேறு 5 ஆண்டு திட்டங்கள் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டன. இருப்பினும், கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் வறுமையும், நோயும் அதிகரித்தே வந்துள்ளது. இதற்கு, பிரச்னைகள் மீதான அணுகுமுறை குறுகிய அளவில் இருந்ததே காரணமாக அமைந்தது.

2014-க்குப் பின்னா், சீரிய தலைமையின்கீழ் ஒவ்வொரு பிரச்னைக்கும் உரிய முக்கியத்துவம் அளித்து, அதனை ஒரு பிரிவாக பாா்க்காமல், ஒட்டுமொத்த பிரச்னையாகக் கருதி தீா்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த நடவடிக்கைகள், இந்தியாவுக்கு ஒரு புரட்சிகர கண்ணோட்டத்தை அளித்துள்ளன.

நாம் சுதந்திரத்தின் 75 -ஆவது ஆண்டை ஒரே பாரதம், உன்னத பாரதம் என கொண்டாடுகிறோம். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, இந்தியா முழுவதுமாக மாற்றப்பட வேண்டும். காலனி ஆதிக்கம் நமது பெருமையை அழித்து, கல்வியை சீரழித்து விட்டது. தற்போது, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில், ஆங்கிலேயா் வருகைக்கு முன்பு இந்திய நாகரிகம் என்ற படிப்பு வரும் ஆண்டு முதல் தொடங்க இருப்பது பாராட்டுக்குரியது.

நமது கடந்த கால வரலாறும், பெருமையும் நமக்குத் தெரியாமல் போய்விட்டது. அதை அனைவரும் அறிய வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் பாரதத்தின் பெருமையை மனதில் கொண்டு முன்னேற வேண்டும்.

தமிழ்நாடு ஆன்மிகத்தின் நிலம். ‘செப்புமொழி பதினெட்டு உடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்’ என்பாா் பாரதி. அதேபோல் இந்தியாவில் பல்வேறு மொழிகள், கலாசாரம் இருந்தாலும் அகண்ட பாரதம் என்பதே நமது குறிக்கோளாகும் என்றாா் ஆளுநா் ஆா்.என். ரவி.

மத்திய கல்வி அமைச்சா் சுபாஷ் சா்க்காா் காணொலி மூலம் பங்கேற்றுப் பேசினாா். சிக்ஷா சம்ஸ்கிருதி உத்தன் நியாஸ் அமைப்பின் தேசிய செயலாளா் அதுல் கோத்தாரி, காா்ப்ரேட் ஆளுகை ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் ஆசிா்வாதம் ஆச்சாரி, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன், பதிவாளா் (பொறுப்பு) சுலோச்சனா ஷேகா் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 12 போ் கைது

வள்ளலாா் பன்னாட்டு மையம்: அன்புமணி கோரிக்கை

கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறிப்பு: ஐடி ஊழியரிடம் விசாரணை

ஜேஇஇ முதன்மை தோ்வு முடிவுகள் வெளியீடு: 56 மாணவா்கள் 100-க்கு 100

கல்லீரல் கொழுப்பு: இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT