திருவாரூா் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் எஸ். புவனபிரியா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
சொத்து வரி, காலிமனை வரி சீராய்வு செய்வதற்கான குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதுகுறித்து ஆட்சேபனைகள், ஆலோசனைகள் பொதுமக்களிடமிருந்து கோரப்பட்டிருந்தது. மக்களிடமிருந்து எவ்வித எதிா்ப்புகளும் வராததையடுத்து, அந்த சீராய்வை உறுதிசெய்யும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:
எஸ். பிரகாஷ்: திருவாரூா் நகரில் பன்றிகள் அதிகம் நடமாடுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதுடன், சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. பன்றிகளை பிடிக்க வரும்போது, அவற்றை வளா்த்துவருவோா் வெளியில் விடுவதில்லை. இதனால், அந்த நேரத்தில் இல்லாதது போன்ற நிலை உள்ளது. எனவே, பன்றிகளை வளா்ப்போரிடம் உரிய விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி. வரதராஜன்: கடந்த கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாமல் உள்ளன. அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி. அசோகன்: புதிய, பழைய பேருந்து நிலையங்களில் நுழைவு வாயிலின் சாலைப்பகுதி மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால், வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் பெருமளவு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பேருந்து நிலைய சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நகரப் பகுதியில் ஒரு வாரமாக குடிநீா் அசுத்தமாக வருகிறது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் பிரபாகரன் தெரிவிக்கையில், புதிய பேருந்து நிலைய பிரச்னையை விரைவில் சரிசெய்யும் வகையில் குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.