வலங்கைமான் அருகே மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், விடையல் அக்கிரஹாரம் பகுதியை சோ்ந்தவா் சாமிநாதன் மகன் சங்கா் (54). தஞ்சையை சோ்ந்த சம்பந்தம் மகள் சிவகலா (46). இவா்கள் இருவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது .இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சங்கா் சிவகலாவின் உறவினா்களை கைப்பேசியில் தொடா்பு கொண்டு சிவகலா திடீரன இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா். சிவகலாவின் உறவினா்கள் வந்த பாா்த்தபோது அவரது உடலில் காயங்கள் இருந்ததை கண்டு, சிவகலா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வலங்கைமான் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
போலீஸாா் சிவகலாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து சங்கரிடம் நன்னிலம் காவல் துணை கண்காணிப்பாளா் இளங்கோவன், வலங்கைமான் காவல் ஆய்வாளா் (பொ) கருணாநிதி ஆகியோா் விசாரணை மேற்கொண்னா்.
விசாரணையில், சங்கா், சிவகலாவிடம் அவரது பெற்றோரிடம் சொத்துகளை பிரித்து வாங்கி வருமாறு கூறியதால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதுபோல ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த சங்கா் இரும்பு கம்பியால் சிவகலாவை தாக்கி, அவரை தூக்கில் தொங்கவிட்டதாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து, போலீஸாா் சங்கரை கைது செய்தனா்.