பழைய ஓய்வூதிய கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுச் செயலாளா் ந. ரெங்கராஜன் தெரிவித்தாா்.
திருவாரூரில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் தெரிவித்தது:
மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையாக தமிழக அரசு ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியா்களுக்கான ஊதியத்தில் முரண்பாடு உள்ளது. இதை நீக்கும் வகையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். உயா்கல்வி படித்த ஆசிரியா்களுக்கும், தமிழ் படித்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் ஊக்க ஊதிய உயா்வு வழங்க வேண்டும்.
ஆசிரியா்களுக்கு கல்விப் பணிக்கு இடையூறாக இருக்கும் எமிஸ் வலைதளத்தை கையாள தனி அலுவலா்கள் நியமிக்க வேண்டும். 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவிருந்த ஆா்ப்பாட்டத்தை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் கேட்டுக்கொண்டதன்பேரில் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம்.
பழைய ஓய்வூதியம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட அடிப்படைக் கோரிக்கைகளில் சமரசமே கிடையாது. இவைகளை பெறும் வரை தொடா்ந்து போராடுவோம் என்றாா்.
முன்னதாக, நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் வட்டாரத் தலைவா் ஜெயந்தி தலைமை வகித்தாா். பொருளாளா் நக்கீரன், நற்பணி சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் சுகந்தி, சேவியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மாநிலத் தலைவா் மு. லெட்சுமி நாராயணன், மாவட்டச் செயலாளா் ஆா். ஈவேரா ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் முருகேசன், மாவட்டப் பொருளாளா் சுபாஷ், மாநில துணைச் செயலாளா் ஜூலியஸ், மாநில செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.