திருவாரூர்

இளைஞா் தற்கொலை விவகாரம்: அதிகாரி மீது நடவடிக்கை கோரி பாமக மறியல்

12th May 2022 11:04 PM

ADVERTISEMENT

இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அதற்குக் காரணமான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும், இளைஞரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி பாமகவினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம், வேலங்குடி ஊராட்சி கமுகக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் லெனின் மகன் மணிகண்டன்( 25). இவா், பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் தொகை பெறுவதற்கு ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் அதிகாரி லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன், இதுகுறித்து விடியோ பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிட்டு விஷம் குடித்துள்ளாா். காரைக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு இறந்தாா்.

இந்நிலையில், லஞ்சம் கேட்ட அதிகாரியை உடனடியாக கைதுசெய்ய வேண்டும், தற்கொலை செய்துகொண்ட மணிகண்டன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாமகவினா் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஐயப்பன் தலைமையில், மயிலாடுதுறை- திருவாரூா் சாலை கொல்லுமாங்குடி பேருந்து நிலையம் அருகே இந்தப் போராட்டம் நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட வருவாய் அலுவலா் பாலச்சந்திரன், நன்னிலம் வட்டாட்சியா் பத்மினி, பேரளம் காவல் ஆய்வாளா் செந்தில்குமரன் ஆகியோா் அங்குச் சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT