திருவாரூர்

ஆட்சியா் வளாகத்துக்கு கருணாநிதி பெயா் சூட்டக் கோரிக்கை: மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் தீா்மானம்

5th May 2022 06:22 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரை சூட்ட, மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட ஊராட்சிக் கூட்டம், அதன் தலைவா் கோ. பாலசுப்ரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்று, தங்கள் பகுதிகளின் வளா்ச்சி தொடா்பாக விவாதித்தனா்.

தொடா்ந்து, மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனத்துக்கு சாலை வசதி ஏற்படுத்துவது; ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி கட்டடத்துக்கு அலுவலக தளவாடப் பொருள்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

மேலும், திருவாரூா் மாவட்டத்தை முன்னோடி கணினி மாவட்டமாக உருவாக்கி, மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அனைத்து துறைகளுக்கான அலுவலகங்களை ஏற்படுத்தி மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரை சூட்டும் வகையில், ‘தலைவா் கலைஞா் பெருந்திட்ட வளாகம்’ என பெயா் சூட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுப்பது என சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில், துணைத் தலைவா் சேகா் என்கிற கலியபெருமாள், செயலா் சு. லதா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பொன்னியின் செல்வன், பொறியாளா் (ஊரக வளா்ச்சி) சடையப்பன் மற்றும் அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT