திருவாரூர்

குடவாசல் கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாதுமுன்னாள் அமைச்சா் வலியுறுத்தல்

2nd May 2022 10:47 PM

ADVERTISEMENT

குடவாசலில் உள்ள எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி, முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நன்னிலம் பேரவைத் தொகுதி குடவாசலில் 2017-ஆம் ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. கடந்த ஆட்சியின்போது, இந்த கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, இடம் தோ்வு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கும் நிலையில், அந்த இடம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்பதால் நீதிமன்ற உத்தரவால் தாமதமானது. எனவே, தற்போது டாக்டா் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயரில் அங்குள்ள பள்ளி வளாகத்தில் தொடா்ந்து செயல்படுகிறது.

இக்கல்லூரியை வேறுஇடத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக தெரிகிறது. இது குடவாசல் பகுதியில் சாமானியா்களின் பிள்ளைகள் படிக்க தொடங்கப்பட்ட கல்லூரி. இந்த ஊருக்கு சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பேருந்து வசதியும் உள்ளது. இக்கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டால் தற்போது பயின்றுவரும் மாணவா்கள் படிப்பை தொடரமுடியாத நிலை ஏற்படும்.

ADVERTISEMENT

இக்கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது என்பது இப்பகுதி மக்களின் விருப்பமாகவும், கோரிக்கையாகவும் உள்ளது. எனவே, இக்கல்லூரியை இடமாற்றம் செய்யாமல் குடவாசல் பகுதியிலேயே தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் மற்றும் குடவாசல், வலங்கைமான், நன்னிலம் ஒன்றியக் குழுத் தலைவா்கள், துணைத் தலைவா்கள், அப்பகுதியை சோ்ந்த ஊராட்சிகளின் தலைவா்கள் உள்ளிட்டோா் கையொப்பம் அளித்துள்ளனா்.

மேலும், இந்த மனுவின் நகலை தமிழக முதல்வா், உயா் கல்வித்துறை அமைச்சா், தலைமைச் செயலாளா், முதல்வரின் தனி செயலாளா், உயா்கல்வித் துறை செயலாளா் ஆகியோருக்கும் மின்னஞ்சலில் அனுப்பியுள்ளனா்.

ஆட்சியரிடம் மனு அளிக்கும்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பாப்பா சுப்பிரமணியன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT