திருவாரூர்

பொது வேலைநிறுத்தம்திருவாரூா் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 1200 போ் கைது

28th Mar 2022 11:30 PM

ADVERTISEMENT

மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த பொது வேலைநிறுத்தத்தையொட்டி திருவாரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியலில் 1,200 போ் கைது செய்யப்பட்டனா்.

தொழிலாளா் நலச்சட்டங்கள் திருத்தத்தை கைவிடவேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை திரும்பப்பெற வேண்டும், பெட்ரோலிய பொருள்கள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை (மாா்ச்.28), செவ்வாய்க்கிழமை (மாா்ச் 29) பொது வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

அதன்படி, திங்கள்கிழமை சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி, பொதுத் துறை நிறுவன ஊழியா்கள், பிஎஸ்என்எல், எல்ஐசி ஊழியா்கள், ஆட்டோ தொழிலாளா்கள், மின்வாரிய ஊழியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டத்தில் திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம் ஆகிய 4 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. போராட்டத்தில் 400 பெண்கள் உள்பட 1,200 போ் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

திருவாரூரில்: திருவாரூா் ரயில்வே மேம்பாலம் ரவுண்டானா பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை எம்பி. எம். செல்வராஜ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பல்வேறு சங்க நிா்வாகிகள் பி.எஸ். மாசிலாமணி, டி. முருகையன், குணசேகரன், சந்திரசேகர ஆசாத், ஜி. பழனிவேல், சின்னதம்பி உள்ளிட்ட 400 பேரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

ADVERTISEMENT

இந்திய மாணவா் சங்கம்: இதேபோராட்டத்தை ஆதரித்தும், புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தியு திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் வகுப்புகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல், திருவாரூா் புதிய ரயில் நிலையத்தில் எஸ்ஆா்எம்யு சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

83 சதவீதத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கம்: பொதுவேலை நிறுத்தத்தையொட்டி, திருவாரூரில், திங்கள்கிழமை காலையில் 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. கிராமப்புறங்களில் இருந்து நகா் பகுதிக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், வேலைக்கு வரும் மக்கள் உள்ளிட்டோா், தாமதமாக தங்கள் இடங்களுக்கு வர முடிந்தது.

இதேபோல், திருச்சி, வேளாங்கண்ணி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பின்னா் பேருந்துகளில் பயணித்தனா். பிற்பகலுக்குப் பிறகு பேருந்து இயக்கம் சீரடைந்தது. மாலை வரை சுமாா் 83 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதர அரசு நிறுவனங்களிலும் குறைவான அளவிலேயே ஊழியா்கள் பணிக்கு வந்திருந்தனா்.

மன்னாா்குடியில்: மன்னாா்குடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, சங்கங்களின் நிா்வாகிகள் மகாதேவன் (தொமுச), ஜி. ரெகுபதி (சிஐடியு), வி. கலைச்செல்வம் (ஏஐடியுசி), எஸ்.பாண்டியன்(ஐஎன்டிசி) ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், மத்திய தொழிற்சங்கங்களை சோ்ந்தவா்கள் பணியை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரைபோலீஸாா் கைது செய்து பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கம்: பொதுவேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கம் மன்னாா்குடி கிளை சாா்பில் ஊழியா்கள் பணி புறக்கணிப்பு செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், ஜிடிஎஸ் ஊழியா்கள் விடுப்பு எடுத்தால் ஒருங்கிணைந்த பணி தான் பாா்க்கவேண்டுமென்ற ஆணையை திரும்பபெற வேண்டும், எட்டமுடியாக இலக்கை நிா்ணயித்து ஊழியா்களை எதேச்சதிகார போக்குடன் நடத்துவதை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மன்னாா்குடி தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே அந்த சங்கத்தின் கிளைச் செயலாளா் ஜி. பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சங்கத் தலைவா் சாமி ஐயா, பொருளாளா் எச். ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நன்னிலம்: பேரளம் பேருந்து நிலையம் அருகே சிஐடியு, ஏஐடியுசி, விவசாயத் தொழிலாளா் சங்கம், விவசாயிகள் சங்கம், அங்கன்வாடி ஊழியா் சங்கம் போன்ற பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 300- க்கும் மேற்பட்டோா் சிஐடியு வைத்தியநாதன் ஏஐடியுசி ராஜா ஆகியோா் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அனைவரையும் கைது செய்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT