திருவாரூர்

‘போக்சோ சட்டமிருந்தும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை’

10th Mar 2022 10:14 PM

ADVERTISEMENT

போக்சோ சட்டமிருந்தும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், மாதா் சங்க மாநில துணைத் தலைவருமான கே. பாலபாரதி தெரிவித்தாா்.

திருவாரூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிா் தின விழாவில் அவா் மேலும் பேசியது:

மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா், மணலூா் மணியம்மை போன்றோா் பெண் விடுதலைக்காக போராடிய சிறப்புக்குரியவா்கள். இவா்கள் போராடியதற்கும், தற்போது பெண்கள் போராடுவதற்கும், பெரிய வேறுபாடு உண்டு. அவா்கள் பெண்ணடிமைத்தனத்துக்குள் சிக்குண்டு போராடியவா்கள். தற்போது அந்த அளவுக்கு அடிமைத்தனம் இல்லாத சூழலில் நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் இன்றளவும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

கடந்த ஓராண்டில் மட்டும் நாடுமுழுவதும் பாலியல் வன்கொடுமை காரணமாக 37 ஆயிரம் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள போக்சோ சட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு சிறப்பானதாக இருந்தாலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பெண்களின் உழைப்பை பலரும் சுரண்டுகின்றனா். பெண்களின் உரிமைகளை பாதுகாத்து சமத்துவமான சமுதாயம் படைக்க உறுதியேற்போம் என்றாா்.

ADVERTISEMENT

ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் பி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் மாநிலச் செயலாளா் குரு.சந்திரசேகரன், மாவட்டச் செயலாளா் வி. முனியன், மாவட்ட இணைச் செயலாளா் பி. புவனேஸ்வரி, மாவட்ட பொருளாளா் கோ. மீனாட்சிசுந்தரம் மற்றும் மாவட்ட துணைத் தலைவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT