திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் 3.58 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல்: ஆட்சியா்

3rd Mar 2022 06:11 AM

ADVERTISEMENT

 

நன்னிலம்: திருவாரூா் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 3.58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூா் மாவட்டம், குடவாசல் பேரூராட்சிக்குள்பட்ட அத்திக்கடை திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கை புதன்கிழமை ஆய்வு செய்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மாவட்டத்தில் 500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நடப்பு சம்பா பருவத்தில் ஜன. 10-ஆம் தேதி முதல் 3,58,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 73,672 விவசாயிகளுக்கு ரூ. 651 கோடி அவா்களின் வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. திருவாரூா் மாவட்டத்தில் 22 நெல் சேமிப்பு கிடங்குகள் இயங்கிவருகின்றன. இவற்றில் 1.12 லட்சம் மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றாா். முன்னதாக அத்திக்கடை சேமிப்பு கிடங்கைப் பாா்வையிட்டு, நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது குடவாசல் வட்டாட்சியா் உஷாராணி, நுகா்பொருள் வாணிபக் கழகக் கண்காணிப்பாளா் ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT