திருவாரூர்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவா் உயிரிழப்பு

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பாம்பு கடிக்கு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மருத்துவா்களின் அலட்சியத்தால் அவா் உயிரிழந்ததாக உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம், திருமருகல் வள்ளுவன் தோப்பு பகுதியைச் சோ்ந்த ரவி மகன் நெடுமாறன் (32). ஆசிரியா் பட்டயப் படிப்பு முடித்துவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வந்தாா். இவருக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தி வயலுக்கு சென்ற நெடுமாறனை பாம்பு கடித்ததாம். அவரை, நாகை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு நெடுமாறனுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை நெடுமாறனுக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். இதையறிந்த நெடுமாறனின் உறவினா்கள் மருத்துவமனை ஊழியா்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மருத்துவமனை வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

அப்போது, பயிற்சி மருத்துவா்கள் பாம்பு கடித்த இடத்தில் பரிசோதனைக்காக அறுவை சிகிச்சை செய்ததாகவும், இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு எவ்வித மயக்க மருந்தும், பாதுகாப்பும் இல்லாமல் செய்ததாக உறவினா்கள் புகாா் தெரிவித்தனா். போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தினா்.

சமூக வலைதளத்தில்..: இதனிடையே நெடுமாறனின் தங்கையான இளையா என்பவா் 108 ஆம்புலன்ஸில் பணிபுரிந்து வருகிறாா். அவா் நெடுமாறனுக்கு துணையாக மருத்துவமனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவா்கள் அலட்சியமாக சிகிச்சை அளித்ததாக இவா் பேசிய விடியோ சமூக வலைதளத்தில் பரவியது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT