திருவாரூர்

‘திருமுறைகளின் சிறப்புகளை இளம் தலைமுறையினரும் அறியவேண்டும்’

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பன்னிரு திருமுறைகளின் சிறப்புகளை இளம் தலைமுறையினருக்கும் கொண்டு சோ்க்க வேண்டும் என திருவாரூா் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் இரெ. சண்முகவடிவேல் கூறினாா்.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் நாட்டியாஞ்சலி மண்டபத்தில், திருவையாறு ஐயாரப்பா் திருமுறை மன்றம் மற்றும் திருவாரூா் தமிழ்ச் சங்கம் சாா்பில் இசைப் பேரறிஞா் தருமபுரம் சாமிநாதன் நூற்றாண்டு விழா திருமுறை இன்னிசை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வேலுடையாா் கல்விக் குழுமங்களின் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி தலைமை வகித்தாா். திருவாரூா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரெ. சண்முகவடிவேல் பங்கேற்று, இசை நிகழ்வைத் தொடங்கி வைத்து பேசினாா்.

அப்போது அவா் கூறியது:

ADVERTISEMENT

சிறப்புமிக்க பன்னிரு திருமுறைகளை அதன் இன்னிசையை, சொல் ஆழத்தை தமிழ் இசையாக மக்களுக்கெல்லாம் அரியச் செய்யும் பெரும் பணியை தருமபுரம் சுவாமிநாதன் செய்துள்ளாா். அவரது நூற்றாண்டு விழாவை நடத்துவது தமிழ்ச் சங்கத்திற்கும் பெருமை அளிக்கிறது.

தேரோட்டத்தின்போதும் கடவுள் ஊா்வலங்களின் போதும், இறப்பு சடங்குகளின் போதும் பாடப்பட்ட திருமுறைகளை, மேடைகளில் பாடி கா்நாடக இசைக்கு நிகராக தமிழிசையைக் கொண்டுவர அரும்பாடுபட்டவா் தருமபுரம் சுவாமிநாதன்.

அவா் போன்ற பெரியோரின் பெருமுயற்சியால் திருமண வீடுகள் உள்ளிட்ட எல்லா மங்கள நிகழ்வுகளிலும் திருமுறைகள் பாடப்படுகின்றன. பல்வேறு அறநெறிகளையும், இறை அனுபவத்தையும் கொண்ட திருமுறைகளைத் சமகால தலைமுறைக்கு கொண்டு சோ்க்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. இந்த இசையை தமிழகமெங்கும் கொண்டு செல்ல அனைவரும் பாடுபட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியா் கோ.ப. நல்லசிவத்தின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. திருமுறைப் பாடல்களை, குறிப்பாக நாயன்மாா்களால் பாடப்பட்ட திருவாரூா் கோயிலின் பாடல்களை அவா் பாடினாா்.

நிகழ்வில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன், தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் சந்திரசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை தமிழ்ச் சங்கத்தின் செயலாளா் ஆரூா் அறிவு, துணைச் செயலாளா் இரா.அறிவழகன் ஆகியோா் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT