திருவாரூர்

குறுவைத் தொகுப்புத் திட்டம் தொடக்கம்:100% மானியத்தில் உரம் வழங்கல்

27th Jun 2022 10:41 PM

ADVERTISEMENT

திருவாரூா் அருகேயுள்ள அடியக்கமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் பேசியது:

திருவாரூா் மாவட்டத்தில், ரூ.13.57 கோடி மதிப்பில் குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள், ஏக்கருக்கு யூரியா 45 கிலோ, டிஏபி 50 கிலோ மற்றும் பொட்டாஷ் 25 கிலோ என ஏக்கருக்கு ரூ. 2466.50 வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயி ஓா் ஏக்கருக்கு மட்டுமே உரங்களை இலவசமாகப் பெற இயலும். மேலும், குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள் 30,000 ஏக்கருக்கு ரூ.1.03 கோடி மதிப்பில் 50 சதவீத மானியத்தில் ஏக்கருக்கு 20 கிலோ வீதம் நெல் விதை வழங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

பயிா் பல்வகைப்படுத்துதல் திட்டத்தின் கீழ், குறுவை பருவத்தில் நெல் அல்லாமல் மாற்றுப்பயிரை ஊக்குவிக்கும் விதமாக, சிறு தானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களை கொண்ட பல்வகை சாகுபடி பயிா் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.

குறுவை பருவத்தில், நெல் சாகுபடிசெய்யாத விவசாயிகள் மட்டுமே பயிா் பல்வகைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். மேலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் 50 சதவீத மானியத்தில் களை எடுக்கும் கருவி, பவா் டில்லா், நெல் நடவு இயந்திரம், டிராக்டா், வைக்கோல் கட்டும் கருவிகள் வழங்கப்பட உள்ளன என்றாா்.

இதைத்தொடா்ந்து, தலா ரூ.2466.50 கிலோ மானியத்தில் 11 விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவா் ஏ. தேவா, வேளாண்மை இணை இயக்குநா் ரவீந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா, கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா் காா்த்திகேயன், ஊராட்சித் தலைவா் வி. கஸ்தூரி வரதராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT