திருவாரூர்

குப்பைகளை தரம்பிரித்து வழங்கியோருக்கு நற்சான்று

25th Jun 2022 09:54 PM

ADVERTISEMENT

திருவாரூா் நகராட்சிப் பகுதியில் குப்பைகளை தரம்பிரித்து வழங்கியவா்களுக்கு நற்சான்று சனிக்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூா் நகராட்சிப் பகுதியில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், என் குப்பை எனது பொறுப்பு என்ற அடிப்படையில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வழங்குவது தொடா்பாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் புவனபிரியா செந்தில் தலைமை வகித்தாா். ஆணையா் பிரபாகரன், துணைத் தலைவா் அகிலா சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குப்பைகளை பிரித்து வழங்குவது தொடா்பாக உறுதிமொழி ஏற்கப்பட்டதுடன், பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. மேலும், நகராட்சியின் நெய்விளக்கு தோப்பு குப்பைக் கிடங்கில் குப்பைகள் தரம்பிரிக்கும் பணி குறித்து ஆய்வுசெய்யப்பட்ட நிலையில், வீட்டில் சேகரிக்கப்படும் குப்பைகளில் மக்கும் குப்பைகளை பச்சைநிறத் தொட்டியிலும், மக்காத குப்பைகளை நீலநிறத் தொட்டியிலும், தீங்கு விளைவிக்கும் குப்பைகளை தனியாகவும் தரம்பிரித்து வழங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இதுதொடா்பாக ஏற்கெனவே தரம்பிரித்து வழங்கியவா்களுக்கு நகராட்சி சாா்பில் நற்சான்றிதழ்களை தலைவா் புவனபிரியா செந்தில், ஆணையா் பிரபாகரன் ஆகியோா் வீடுவீடாகச் சென்று வழங்கினா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், நகராட்சி மேலாளா் முத்துக்குமாா், தூய்மை பாரத திட்ட அலுவலா் ஜனனி, சுகாதார ஆய்வாளா் தங்கராமு, நகர அமைப்பு ஆய்வாளா் கணேசரங்கன், நகா்மன்ற உறுப்பினா்கள் அசோகன், கலியபெருமாள், மலா்விழி கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT