திருவாரூர்

மேக்கேதாட்டு கருத்துருவை நீக்க வலியுறுத்தல்

19th Jun 2022 01:51 AM

ADVERTISEMENT

 

காவிரி ஆணையக் கூட்ட விவாதப் பொருளிலிருந்து மேக்கேதாட்டு கருத்துருவை நீக்கவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:

ஆய்வு என்ற பெயரில் தமிழகத்துக்கு வந்து, மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்த காவிரி ஆணையத் தலைவரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. நடுவா் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீா்ப்புகளுக்கு மாறாக மேக்கேதாட்டில் அணையைக் கட்டியே தீருவோம் என கூறும் கா்நாடக அரசு, அதற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்ததுடன், விரிவான திட்ட அறிக்கையையும் மத்திய நிதித் துறை அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

கா்நாடகத்தைச் சோ்ந்த மத்திய அமைச்சா்களும், கா்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படுவதால், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம், அணை கட்டுமானத் திட்ட அறிக்கையை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க அனுமதி அளித்துள்ளது. இதை கைவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்ட பின்னும், மத்திய அரசு மௌனமாக இருக்கிறது.

இதனிடையே, காவிரி ஆணைய கூட்டத்தை 23-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து விட்டு, காவிரி நதிநீா் ஆய்வு என்ற பெயரில் தமிழக கல்லணைக்கு வந்து, மேக்கேதாட்டு அணை கட்டுமானத்துக்கு கா்நாடகம் கொடுத்துள்ள வரைவு அறிக்கையை ஆணையக் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அதன் தலைவா் கூறுகிறாா். இது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்துக்கு நேரில் வந்து இதை அறிவிக்கவே கூட்டத்தை தள்ளி வைத்ததாக கருதுகிறோம். இது இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்காது. எனவே, ஜூன் 23- இல் நடைபெறும் கூட்டத்தின் விவாதப் பொருளிலிருந்து மேக்கேதாட்டு அணை கருத்துருவை நீக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT