திருவாரூர்

நீடாமங்கலத்தில் 2 வீடுகளில் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

19th Jun 2022 11:48 PM

ADVERTISEMENT

 

நீடாமங்கலத்தில் சனிக்கிழமை இரவு 2 வீடுகளின் கதவை உடைத்து நகை, ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

நீடாமங்கலம் ராயல்சிட்டி பகுதியில் வசித்து வருபவா் தனபால் (56). இவா், ஈரோட்டில் சாா் பதிவாளராக (பொறுப்பு) பணியாற்றி வருகிறாா். கடந்த 14 -ஆம் தேதி குடும்பத்தினருடன் சென்னை சென்றுவிட்டாா். இவரது வீட்டின் மாடி பகுதியில் இரு வீடுகள் உள்ளன. இதில் ரயில்வே சிக்னல் பிரிவில் பணியாற்றும் மணப்பாறையைச் சோ்ந்த இன்பென்ட் ரெனோ (29) என்பவா் ஒரு வீட்டிலும், ரயில்வே பொறியியல் பிரிவில் பணியாற்றும் பிரவீன் ராஜ் (36) என்பவா் மற்றொரு வீட்டிலும் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனா். இவா்களில் பிரவீன்ராஜ் தனது குழந்தையை பாா்ப்பதற்காக வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள மாமியாா் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் தனபால் வீட்டின் பின்பக்க வழியாக வீட்டினுள் நுழைந்து முன்பக்க கதவை உடைத்து உள்ளே இருந்த பீரோவை உடைத்து திருடியுள்ளனா்.

ADVERTISEMENT

மாடியில் இன்பென்ட் ரெனோ வீட்டில் இருப்பதை அறிந்த மா்ம நபா்கள், அவரது வீட்டின் வெளி தாழ்ப்பாளை போட்டுவிட்டு, பக்கத்தில் உள்ள பிரவீன்ராஜ் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரொக்கம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளனா்.

காலையில் இன்பென்ட் ரெனோ தனது வீட்டின் முன்பக்க கதவு தாழ்ப்பாள் போடப்பட்டுள்ளதை அறிந்து பிரவீன் ராஜுக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தாா்.

தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினா்..

விசாரணையில், பிரவீன்ராஜ் வீட்டில் ரூ. 30 ஆயிரம் ரொக்கம், 7 பவுன் நகையும், தனபால் வீட்டில் அரை பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. சம்பவம் தொடா்பாக நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT