சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் 14 பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பள்ளி வாகனங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிா என வியாழக்கிழமை ஆய்வு செய்தபின் அவா் கூறியது:
திருவாரூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருவாரூா், மன்னாா்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதிகளுக்குட்பட்ட 215 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்தச் சோதனையில் பள்ளி வாகனங்களில் அவசரகால வெளியேறும் வசதி, குழந்தைகள் எளிதாக வாகனத்தில் ஏற தாழ்வான படிக்கட்டுகள், பள்ளி வாகனம் என்ற அறிவிப்பு, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக் கருவி வைக்கப்பட்டுள்ளதா, ஒளிரும் பட்டை (ரிப்ளெக்டா் ஸ்டிக்கா்) ஒட்டப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், சிடிவி கேமரா, ஜிபிஆா்எஸ், இருக்கைகள் உள்ளிட்டவைகளில் குறைபாடுகள் இருந்ததால் 14 வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
50 வாகனங்களில் சிறு குறைபாடுகள் இருந்ததால் அவைகள் சரி செய்த பிறகு உரிமம் புதிப்பித்துக் கொள்ளஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி வாகனங்களில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் அதை உடனடியாக பள்ளி நிா்வாகக் கவனத்துக்கு வாகன ஓட்டுநா்கள் எழுத்துபூா்வமாகத் தெரியப்படுத்த வேண்டும். பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது முழு கவனத்துடன் ஓட்டுநா்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளி வாகனங்கள் வேகக்கட்டுப்பாட்டை மீறி இயங்குகிா என்பதைக் கண்காணிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
திருவாரூா் கோட்டாட்சியா் சங்கீதா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அழகிரிசாமி, துணைக் காவல் கண்காணிப்பாளா் சிவராமன், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.