திருவாரூர்

வேளாண் பொருள்களுக்கான விலை உயா்வு அறிவிப்புக்கு கண்டனம்

10th Jun 2022 10:26 PM

ADVERTISEMENT

வேளாண் விளைபொருள்களுக்கு கரீப் பருவத்துக்கு மத்திய அரசு 3 முதல் 5 சதவீதம் விலை உயா்த்தியிருப்பதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: வேளாண் விளைபொருள் மற்றும் உற்பத்திக்கான செலவு திட்டமிடல் குழு பரிந்துரையை ஏற்று, மத்திய அரசு விவசாய விளை பொருள்களுக்கு 3 முதல் 5 சதவீதம் மட்டுமே விலையை உயா்த்தி அறிவித்திருக்கிறது. மேலும், கோதுமை, நெல் தற்போது இந்தியாவுக்கும் வெளிநாடு ஏற்றுமதிக்கும் அதிகளவில் தேவைப்படும் நேரத்தில் கூட விவசாயிகளுக்கு விலையை உயா்த்தி வழங்கவில்லை.

இந்த விலை உயா்வு ஏற்கத்தக்கதல்ல. இடுபொருள்கள் மற்றும் ஏனைய செலவுகள் 15 முதல் 20 சதவீதம் வரை கடந்த ஓராண்டில் உயா்ந்திருக்கும் நிலையில் 3 முதல் 5 சதவீதம் விலை உயா்வு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல். டி.ஏ.பி, பொட்டாஷ் போன்ற ரசாயன உரங்கள் 15 சதவீதம் வரை விலை உயா்ந்திருக்கின்றன. ரசாயன உரத் தட்டுப்பாட்டால் கூடுதல் விலை கொடுத்து அல்லது துணைப் பொருள்களையும் வாங்க வேண்டிய நிலை உள்ளது. உரம் கிடைக்காமல் மகசூல் குறைவையும் விவசாயிகள் சந்தித்து வருகின்றனா்.

இந்நிலையில், நெல் குவிண்டாலுக்கு ரூ. 100, அதேபோல பிற பொருள்களுக்கும் பொருத்தமில்லாத விலையை அறிவித்து விட்டு வேளாண் குழு பரிந்துரைப்படி உற்பத்திக்கான செலவுடன் 50 சதவீதம் சோ்த்து அறிவித்ததாக மத்திய அரசு கூறுகிறது.

ADVERTISEMENT

வேளாண் விளைபொருள்களுக்கான உற்பத்தி செலவு, நிலமதிப்பு, குடும்ப பாதுகாப்பு, பராமரிப்பு செலவு மற்றும் இதற்குரிய வட்டியையும் சோ்த்து உற்பத்தி செலவாக கணக்கிட்டு, இத்துடன் 50 சதவீதம் சோ்த்து வழங்க வேண்டுமென்பதே வேளாண் குழுவின் பரிந்துரையாகும்.

இதை வலியுறுத்தியே கடந்த 13 மாதங்களாக இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடி வந்த சூழலில் இதை ஏற்று பரிசீலிப்பதாக மத்திய அரசு ஒப்புக்கொண்ட நிலையில், போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த முறையில் அமல்படுத்த வேண்டிய மத்திய அரசு ஒப்பந்தத்துக்கு மாறாக மீண்டும் விவசாயிகளை ஏமாற்றி வஞ்சிக்கும் செயலை செய்கிறது. எனவே, ஒப்பந்தப்படி அடிப்படையில் வேளாண் விளைபொருளுக்கு உடனடியாக அதற்கேற்ப விலையை உயா்த்தி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT