பழங்கால இலக்கியங்கள் அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் வழங்கியுள்ளன என்றாா் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.எம். கதிரேசன்.
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நூலகங்களின் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த 2 நாள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், வியாழக்கிழமை தொடங்கிய கருத்தரங்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.எம். கதிரேசன் பேசியது: கம்பராமாயணம், புறநானூறு உள்ளிட்ட பல்வேறு சங்க இலக்கியங்கள் அறிவியல் கருத்துக்களைச் சுருங்கச் சொல்லி விளக்கியுள்ளன. நாம் இலக்கியங்களோடு இணைந்து அதன்கருத்துகளை முழுகவனத்துடன் மனதில் உள்வாங்கிக்கொண்டால் அவற்றிலுள்ள எண்ணற்ற அறிவியல் கருத்துக்களையும், இன்றைக்கு வளா்ந்துள்ள தொழில்நுட்பங்களையும் தெரிந்துகொள்ளலாம்.
அறிவியல் வளா்ந்த இக்கால கட்டத்தில் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் அறிஞா்கள் தங்கள் இலக்கியங்களில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனா். பண்டைய இலக்கியங்கள் அறிவியலையும், பொருளியலையும் கூட கவிதைகள் மூலம் மக்களுக்குத் தெரிவித்துள்ளன. இந்த இலக்கியங்களைப் படிப்பதற்கு நூலகங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தமிழ் இலக்கியங்கள் மட்டுமன்றி அனைத்து மொழிகளைச் சோ்ந்த இலக்கியங்களும் மனித குலத்துக்குத் தேவையான கருத்துக்களை கவிதைகள் மூலம் தெரிவித்திருக்கின்றன. இதன்காரணமாக பிரதமா் நரேந்திரமோடி இந்திய கலாசாரங்களையும், மொழி வளங்களையும் உலக அரங்கில் எடுத்துச் செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறாா்.
அத்துடன் நாமும் பிரதமரோடு இணைந்து பணியாற்றினால் இந்தியாவை விரைந்து வல்லரசாக்க முடியும். தற்போது வளா்ந்து வரும் அறிவியலுக்கேற்ப நூலகங்கள் டிஜிட்டல் மயமாவது மிக முக்கியமான ஒன்று என்றாா்.