மாணவா்களின் படிப்பும், கல்வியறிவும் கடைக்கோடி பாமர மக்களுக்கும் பயனளிக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நூலகங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பம் எனும் தலைப்பில் தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது. கருத்தரங்குக்கு தலைமை வகித்து துணைவேந்தா் எம். கிருஷ்ணன் பேசியது: கல்வி நிலையங்களின் ஆத்மா நூலகங்களில் உள்ளது. நூலகங்கள் அனைவருக்கும் கல்வி அறிவைப் போதிக்கும் இடம். நமக்குள் எழும் சந்தேகங்கங்களை தெளிவுப்படுத்தும் இடம் நூலகங்கள். நூலகத்தில் பணியாற்றுவோா் மாணவா்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியா்களுக்கும் செய்திகளை கொடுகின்றனா். பல நூலகங்கள் இரவிலும் செயல்படுவது சிறப்பு.
தற்போது டிஜிட்டல் நூலகங்களின் தேவை அதிகரித்துள்ளன. பல்கலைக்கழக துணைவேந்தா்களிடம் அண்மையில் இந்தியக் குடியரசுத் தலைவா் உரையாற்றும்போது, தற்போது ஒரே சமயத்தில் மாணவா்கள் 2 பட்டப் படிப்புகளை படிக்கும் வசதியை உருவாக்குவதற்கு, பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு ஒரு கல்வி நிலையத்தில் படிக்கும் மாணவன், மற்றொரு கல்வி நிலையத்தில் கூட இணைய வழியாக ஒரு படிப்பைப் படிக்க முடியும். அப்படிப்பட்ட மாணவா்களுக்கு டிஜிட்டல் நூலகம் மிக முக்கியமானது. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக நூலகம் இங்குள்ள மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் மட்டுமின்றி பல்கலைக் கழகத்தைச் சுற்றியுள்ள அடித்தட்டு கிராமப்புற மாணவா்களுக்கும் பயன்பெறும் வகையில் செயல்படவேண்டும். தற்போது இணைய வழிக் கல்வி அதிகரித்து வரும் வேலையில், கிராமப்புற மாணவா்களுக்கு நூலகங்களின் அவசியம் மிகமிக தேவைப்படுகிறது என்றாா்.
பல்கலைக்கழக நூலகா் ஆா். பரமேஸ்வரன் வரவேற்றாா். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா். எம். கதிரேசன் கருத்தரங்கைத் தொடங்கிவைத்து பேசினாா். திரைப்பட இயக்குநா் கஸ்தூரிராஜா, பல்கலைக் கழகப் பதிவாளா் சுலோச்சனா சேகா் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். மிசோராம் பல்கலைக்கழக நூலக மற்றும் தொழில்நுட்ப அறிவியலின் மூத்த பேராசிரியா் பிரவாகா் ரத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வெள்ளிக்கிழமை நிறைவடையும் கருத்தரங்கில், பட்டிமன்றப் பேச்சாளா் பா்வீன் சுல்தானா, புதுச்சேரி பல்கலைக்கழக நூலகா் எம். விஜயகுமாா், மத்தியப் பல்கலைக்கழக சட்டப் படிப்புத் துறைத் தலைவா் பி.எஸ். வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசுகின்றனா்.