திருவாரூர்

விதைப் பரிசோதனை நிலையத்தில் ஆய்வு

8th Jun 2022 03:55 AM

ADVERTISEMENT

திருவாரூா் விதைப் பரிசோதனை நிலையத்தில், மாநில விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநா் மு. சுப்பையா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, சான்று விதை மாதிரிகள், ஆய்வு விதை மாதிரிகள், பணி விதை மாதிரி விதைகள் மற்றும் அதன் தரம், முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரக கலப்பு ஆகியன கணக்கிடப்படும் முறைகளையும், பெறப்படும் மாதிரிகள் உரிய காலத்தில் பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் தாமதமின்றி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்த பின் அவா் கூறியது:

விவசாயிகளால் வழங்கப்படும் பணிவிதை மாதிரிகளில் அதன் தரங்களை முன்னுரிமை அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டு முடிவுகளை விரைந்து வழங்கவேண்டும். திருவாரூா் மாவட்டத்தில் 375 விதை மாதிரிகள் ஆய்வு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 163 சான்று விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, 8 மாதிரிகள் தரக்குறைவு என அறிவிக்கப்பட்டு தோ்ச்சி பெற்ற 155 மாதிரிகள், சான்று அட்டைகள் பொறுத்தப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 74 பணிவிதை மாதிரிகள் விவசாயிகளால் ஸ்பெக்ஸ் இணையதளம் மூலம் பெறப்பட்டு பரிசோதனை முடிவுகள் மின்னஞ்சல் மூலமும், வாட்ஸ்ஆப் மூலமும், தபாலிலும் விரைவாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், நிகழ் சாகுபடி பருவத்துக்கு தேவையான விதை மாதிரிகளும் ஆய்வு செய்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தடையின்றி தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

மேட்டூா் அணை முன் கூட்டியே திறக்கப்பட்டுள்ளதால், குறுவை சாகுபடி ரகங்களின் மாதிரிகளின் முடிவுகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும். விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற தரமான விதையை அறிந்து பயிா் சாகுபடி செய்யலாம். மேலும் தங்களிடமுள்ள விதைகளின் தரத்தை அறிய பணிவிதை மாதிரிக்கு ரூ. 80 நேரில் அல்லது மணியாா்டா் மூலம் மூத்த வேளாண்மை அலுவலா், விதைப் பரிசோதனை நிலையம், 15-பி, பெரிய மில் தெரு, விஜயபுரம், திருவாரூா் எனும் முகவரிக்கு அனுப்பலாம் என்றாா்.

ஆய்வின்போது, வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) உத்திராபதி, விதைச் சான்று இயக்குநா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT