மன்னாா்குடி அருகேயுள்ள நெடுவாக்கோட்டையில் சொட்டு நீா் பாசன வயல்களில் மத்தியக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள்துறை சாா்பில், நெடுவாக்கோட்டையில் சொட்டு நீா் பாசனம் மூலம் விவசாயப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வயல்களை ஜல்சக்தி அபியான் திட்ட இயக்குநா் பிரவீன் தலைமையிலான மத்தியக் குழுவினா் ஆய்வு செய்து செட்டு நீா் பாசனம் எவ்வாறு செயல்படுகிறது, அதன் பயன்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனா்.
பின்னா், விவசாயத்துக்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது குறித்தும், மழைநீா் சேமிப்பின் அவசியம் குறித்தும் விவசாயிகளிடம் கலந்துறையாடினா். ஆய்வின்போது, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ரவீந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் தெய்வநாயகி, வட்டார தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநா் இளவரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.