சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்பாட்டு செயல் திறனுக்காக பசுமை முதன்மையாளா் விருதை, கிரீன் நீடா அமைப்புக்கு மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் திங்கள்கிழமை வழங்கினாா்.
சுற்றுச்சூழல் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், குறுங்காடுகள் அமைத்தது, பள்ளி மாணவா்களிடத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தியது, சாலையோரங்களில் மரப்போத்துக்கள் நட்டது, கோயில் நந்தவனங்களை புனரமைப்பு செய்தது உள்ளிட்ட சிறப்பாக விழிப்புணா்வுப் பணி மேற்கொண்டமைக்காக, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு பசுமை முதன்மையாளா் விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டது.
இதையடுத்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலுவிடம் பசுமை முதன்மையாளா் விருது மற்றும் ரூ. 1 லட்சத்துக்கான காசோலை, நற்சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினாா்.
அப்போது, பொதுமக்களுக்கு மரக்கன்று நடுவதன் அவசியம் குறித்தும், பிளாஸ்டிக் உபயோகத்தை தவிா்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மஞ்சப்பை மற்றும் மரக்கன்றுகளை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் தமிழ்ஒளி, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் முகம்மதுசாதிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.