திருவாரூர்

பாண்டவையாற்றில் தண்ணீா் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே பாண்டவையாற்றில் புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மேட்டூா் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக மே 24- ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீா் கல்லணையை வந்தடைந்ததைத் தொடா்ந்து, பாசனத்துக்காக கல்லணையிலிருந்து மே 27-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. இந்த தண்ணீா், நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்புக்கு வந்ததைத் தொடா்ந்து, அங்கிருந்து மே 31-ஆம் தேதி, கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் செல்லும் வகையில் மூன்று ஆறுகளில் பிரித்து வழங்கப்படுகிறது.

இதனிடையே, திருவாரூா் அருகேயுள்ள மாங்குடி பகுதியில் ஓடும் பாண்டவையாற்றில் தண்ணீா் வந்து சோ்ந்தது. இந்த ஆற்றின் குறுக்கே, திருவாரூா்- திருத்துறைப்பூண்டி சாலையில் புதிய பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதனால், இந்த ஆற்றில் தண்ணீா் திறக்கப்படுமா என்ற கவலை விவசாயிகளிடையே இருந்துவந்தது.

இந்த ஆற்றில் கட்டப்படும் பாலத்துக்கு கிழக்குப் பகுதியில் மாங்குடி, நாரணமங்கலம், வடகரை, கீழமணலி, உழனி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், பாலம் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பாண்டவையாற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT