கூத்தாநல்லூா் அருகே வேளுக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 67 பயனாளிகளுக்கு ரூ.2.49 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூத்தாநல்லூா் வட்டத்தில் அகரவேளுக்குடி, ஓகைப்பேரையூா் உள்ளிட்ட கிராமங்களுக்கான மக்கள் நோ்காணல் முகாம் வேளுக்குடி மாரியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினரும், மன்னை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான ஐ.வி. குமரேசன் தலைமை வகித்தாா்.
புள்ளமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் டீ. செல்வம், ஊராட்சித் தலைவா்கள் ஓகைப்பேரையூா் சின்னையன், அகர வேளுக்குடி நீலமணி பிரகாஷ், சித்தனக்குடி தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வருவாய் ஆய்வாளா் ஜோதி வரவேற்றாா்.
முகாமில், 11 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, 15 பேருக்கு புதிய குடும்ப அட்டை, 8 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, 17 பேருக்கு முதியோா் உதவித்தொகை உள்பட மொத்தம் 67 பேருக்கு ரூ.2.49 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வட்டாட்சியா் சோமசுந்தரம் வழங்கினாா்.
முகாமில், துணை வட்டாட்சியா் பென்சிலால், சமூக நலப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அலைமகள், வட்ட வழங்கல் அலுவலா் ராஜேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கிராம நிா்வாக அலுவலா் தங்கபாண்டியன் நன்றி கூறினாா்.