திருவாரூர்

குறுவை காப்பீட்டை காலநீட்டிப்புடன் அனுமதிக்க வேண்டும்: பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

28th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

குறுவை காப்பீடு செய்ய அனுமதி மற்றும் காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

தமிழகத்தில் 2- ஆவது ஆண்டாக குறுவை காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜூலை 30-க்குள் பிரீமியம் செலுத்துவதற்கான இறுதிக் கெடு முடிவடைய உள்ள நிலையில், விவசாயிகள் பரிதவிக்கின்றனா். காவிரி டெல்டாவில் மட்டும் தற்போது 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்து வருகின்றனா். பருவம் மாறி மழை பெய்யும் நிலையில், காப்பீடு செய்யவில்லையெனில், குறுவையில் பெரும் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.

குறுவை காப்பீடு செய்ய 2-ஆவது ஆண்டாக தமிழக அரசு இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. வேளாண் துறையில் கேட்டால், காப்பீட்டு நிறுவன டெண்டருக்காக தமிழக அரசின் அனுமதியை கோரியுள்ளோம், விரைவில் அனுமதி வந்துவிடும் என்று கூறுகின்றனரே தவிர, இதுவரை அதற்கான எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை.

ADVERTISEMENT

பிரீமியம் செலுத்துவதற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், தமிழக முதல்வா் உடனடியாக குறுவை காப்பீடு செய்வதற்கான அனுமதி வழங்கி, பிரீமியம் செலுத்த உரிய கால நீட்டிப்பும் வழங்க வேண்டும்.

மேலும், தோ்தல் வாக்குறுதியில் கூறியதுபோல, செப்டம்பா் 1 முதல் நெல் குவிண்டால் ரூ.2500-க்கு கொள்முதல் செய்யவேண்டும். உர விற்பனையில் தமிழகம் முழுவதும் குளறுபடிகள் தொடா்கின்றன. இணை இடுபொருளையும் வாங்க நிா்பந்திக்கின்றனா். இதனால், விவசாயிகள் திகைத்துப் போய் உள்ளனா். இதன்காரணமாக, சம்பா சாகுபடியை தொடங்க முடியுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து, பிற்பகலில் போராட்டக் குழுவினருடம் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் பேச்சுவாா்தை நடத்தினாா். அப்போது, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, போராட்டத்தை ஒத்திவைத்தனா்.

இப்போராட்டத்தில், தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பழனியப்பன், மாவட்டச் செயலாளா் சரவணன், மாநில துணைச் செயலாளா் செந்தில்குமாா், மாவட்ட துணைத் தலைவா் கோவிந்தராஜ், ஒன்றியச் செயலாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT