திருவாரூர்

பருத்தி கொள்முதல்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை இரவிலும் திறக்க வலியுறுத்தல்

17th Jul 2022 10:55 PM

ADVERTISEMENT

 

அறுவடை செய்து கொண்டுவரும் பருத்தி பஞ்சுகளை பாதுகாப்பாக வைக்க, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை இரவு நேரங்களிலும் திறந்துவைக்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக நெல்லுக்கு அடுத்தபடியாக பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது. நிகழாண்டில், சுமாா் 49 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருவாரூா், நன்னிலம், குடவாசல், மன்னாா்குடி ஆகிய வட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தியில் தற்போது முதல் சுற்று பஞ்சு எடுப்பு நடைபெறுகிறது.

இந்த பருத்தி பஞ்சுகள், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி பஞ்சு ஏலம் நடைபெறுகிறது. தற்போது, குவிண்டாலுக்கு சுமாா் ரூ. 12 ஆயிரம் வரை ஏலம் போவதால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

இதனால், விவசாயிகள் அறுவடை செய்யும் பருத்தியை திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு சனிக்கிழமை முதலே கொண்டுவருகின்றனா். ஆனால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், மாலை நேரங்களில் பூட்டப்பட்டு விடுவதால், அதற்குப் பிறகு பருத்திப் பஞ்சுகளை வாகனத்தில் எடுத்துவரும் விவசாயிகள், வாகனத்துடன் சாலையிலேயே காத்திருக்கும் நிலை உள்ளது.

இதன்காரணமாக, திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ள நாகை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் சனிக்கிழமை இரவு அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து பருத்தி விவசாயிகள் தெரிவித்தது:

பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு ஓரளவுக்கு லாபம் தருவதாக இருந்தாலும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எடுத்து வந்து, விற்பனை செய்வதற்குள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, பருத்தி ஏலம் நடைபெறும் காலங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கூடுதல் பணியாளா்களை நியமித்து, இரவு நேரங்களிலும் விவசாயிகள் எடுத்து வருகிற பருத்தியை அடுக்கிவைத்து, பராமரித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT