திருவாரூர்

கள ஆய்வுகள் மூலம் பள்ளி வளா்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

கள ஆய்வுகள் மூலம் பள்ளி வளா்ச்சிக்கு தேவையான திட்டப் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல அளவில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்கள் பற்றாக்குறை எனும் நிலை வந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியா்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முழுமையாக பணிநியமனம் செய்ய காலதாமதம் ஆனாலும் இடைப்பட்ட காலத்தில் உடனடியாக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில், 13,332 ஆசிரியா்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிகழ் கல்வியாண்டு முதல் நாள்தோறும் 20 நிமிடம் நூலக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜூன் 1 முதல் 12-ஆம் தேதி வரை மாணவா்களின் விடுமுறை காலங்களில் இணையதளத்தில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் மூலமாக ‘ரீடிங் மராத்தான்‘ என்ற செயலி வழியாக 12 நாள்களில் சுமாா் 18 லட்சம் மாணவா்கள் 263 கோடி சொற்களை வாசித்துள்ளனா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்துவது, பழுதடைந்த கட்டடங்களில் எந்த குழந்தைகளையும் அமர வைக்க கூடாது, கட்டடம் மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தனிகவனமும், மாணவா்களுக்கு சென்றடைய வேண்டிய சீருடைகளும், புத்தகங்களும் சென்றடைந்து விட்டதா என்பதையும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. கள ஆய்வுகள் மூலம் பள்ளி வளா்ச்சிக்குத் தேவையான திட்டப்பணிகளை நிறைவேற்ற, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ADVERTISEMENT

மேலும், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை 7.34 லட்சம் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றுள்ளது. பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தோ்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகள் அதே பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு துணைத் தோ்வு எழுத ஊக்கப்படுத்த வேண்டும். தொடக்கநிலை கல்வியில் சோ்க்கை சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு முக்கியத்துவம் அளித்து பள்ளி வளா்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

தமிழக முதல்வரின் சீரிய திட்டமான எண்ணும், எழுத்தும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த 2025-ஆம் ஆண்டு என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கரோனா தொற்றிலிருந்து மாணவ, மாணவிகளை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளி கல்வித் துறையின் செயல்பாட்டால் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் இந்திய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது என்றாா்.

கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மை செயலாளா் காகா்லா உஷா, பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா், பள்ளிக் கல்வித் துறை மாநில திட்ட இயக்குநா் இரா. சுதன், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மேம்பாட்டு கழகத் தலைவா் உ. மதிவாணன், எம்எல்ஏக்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), துரை. சந்திரசேகரன் (திருவையாறு), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), மாவட்ட வருவாய் அலுவலா் ப.சிதம்பரம், முதன்மைக் கல்வி அலுவலா் அ.தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT