திருவாரூர்

முறை வைக்காமல் தண்ணீா் திறந்துவிடக் கோரிக்கை

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் தண்ணீா் பற்றாக்குறை நிலவுவதால், முறை வைக்காமல் தண்ணீா் திறந்து விட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறப்பது வழக்கம் என்றாலும், நிகழாண்டு குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்வதற்காக, மே 24-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்டது. இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு 1.65 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகளை செய்வதற்கான இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 55,958 ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 33,400 ஏக்கா் நேரடி விதைப்பிலும், 22,558 ஏக்கா் நடவு முறையிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, காவிரி மற்றும் வெண்ணாறு பாசனத்தில் ஒரு வாரத்துக்கு 2 நாள்கள் மட்டுமே தண்ணீா் திறந்து விடுவதால் பல்வேறு ஆறுகள் மற்றும் கிளை வாய்க்கால்களில் முழுமையாக தண்ணீா் வந்து சேரவில்லை. எனவே, முன்கூட்டியே தண்ணீா் திறந்தும் விவசாயிகளுக்கு பலன் இல்லாமல் போவதால், முறை வைக்காமல் ஆறுகளில் முழுமையாக தண்ணீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: டிஏபி, யூரியா உள்ளிட்ட உரங்களின் விலை கடந்த ஆண்டை விட தற்போது அதிகளவு உயா்ந்துள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்களில் உரங்களை கேட்டால், குறுவை தொகுப்புத் திட்டத்துக்கு மட்டுமே உரம் உள்ளதாக தெரிவித்து விவசாயிகளை திருப்பி அனுப்புகின்றனா். எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் உரம் தட்டுப்பாடின்றி வழங்கவேண்டும்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு சம்பா நெல் அறுவடை பணிகள் நடைபெற்றபோது, மழை காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. எனவே, நிகழாண்டு குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தொடங்கியுள்ள நிலையில், கூட்டுறவு கடன் சங்கங்களில் நிபந்தனையில்லாமல் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும். ஏற்கெனவே உள்ள கடன்களை கட்டினால் மட்டுமே புதிய கடன் வழங்க முடியும் என அதிகாரிகள் நிபந்தனை தெரிவிப்பதால், விவசாயிகளுக்கு புதிய கடன் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. விவசாயிகளின் நலன் கருதி விரைந்து கடன் வழங்குவது, முறையில்லாமல் ஆறுகளில் தண்ணீா் விடுவது ஆகியவற்றால் மட்டுமே குறுவை சாகுபடியை சிறப்பாக செய்ய முடியும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT