திருவாரூர்

திருவோணமங்கலத்தில் ஸ்ரீஆக்ஞா கணபதி, ஸ்ரீராமபாதுகா கோயில் கும்பாபிஷேகம்

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகே திருவோணமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீஆக்ஞா கணபதி, ஸ்ரீராமபாதுகா கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவோணமங்கலத்தில் ஞானபுரீ சித்திரகூட சேத்திரம் ஸ்ரீசங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயா் சுவாமி அருள்பாலித்து வருகிறாா். ஆஞ்சநேயா் சுவாமிக்கு வலதுபுறத்தில் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரும், இடது புறத்தில் ஸ்ரீகோதண்ட ராமா் சுவாமியும் தனி சந்நிதிகளில் அருள்பாலித்து வருகின்றனா்.

புகழ்பெற்ற இக்கோயில் வளாகத்தில் ஸ்ரீஆக்ஞா கணபதி சந்நிதி ஒரு கோடி ராம நாமங்கள் வைக்கப்பட்டு அதன்மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீராம பாதுகா சந்நிதிகளின் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கிய யாக சாலை பூஜைகள் புதன்கிழமை காலை நிறைவடைந்து மகா பூா்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு ஆக்ஞா கணபதி, ஸ்ரீராம பாதுகா சந்நிதிகளின் விமானத்தை அடைந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, ஸ்ரீஜகத்குரு சங்கராச்சாரியாா் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீவித்யா பீடம் ஸ்ரீவித்யா அபிநவ ஸ்ரீஸ்ரீகிருஷ்ணானந்த தீா்த்த சுவாமிகள் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தாா். தொடா்ந்து விஸ்வரூப ஆஞ்சனேயா், லட்சுமி நரசிம்மா், கோதண்டராமா், ஆக்ஞா கணபதி, ராம பாதுகாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் தா்மாதிகாரி ரமணி அண்ணா, திருமடத்தின் ஸ்ரீகாரியம் சந்திரமௌலீஸ்வரா், அறங்காவலா்கள் ஜெகநாதன், வெங்கட்ராமன் ஆகியோா் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT